டெல்லியில் வெடிக்கப்போகும் பூகம்பம்.. ஆளுநர் விவகாரத்தை கையில் எடுத்த திமுக! 10 முக்கிய முடிவுகள்!
சென்னை: ஆளுநர்களின் அத்துமீறல்களை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்ட பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் எண்ணம் உள்ளவர்களை ஆளுநர்களாக நியமித்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் விவாதத்தைக் கிளப்ப திமுக தீர்மானித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடங்கி, அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கியது வரை ஆளுநர் - அரசு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் உள்ளதை வாசிக்காமல், புதிய வார்த்தைகளை சேர்த்து படித்தது, கல்லூரி நிகழ்ச்சிகளில், சனாதன கருத்துகளை வெளிப்படுத்துவது போன்ற ஆளுநரின் செயல்களால் தொடர்ச்சியாக திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் உச்சமாக ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் விவாதத்தைக் கிளப்ப திமுக திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், என்னென்ன பிரச்சனைகள் குறித்துப் பேச வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பப்படும். அரசியல் சட்ட பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் எண்ணம் உள்ளவர்களை ஆளுநர்களாக நியமித்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவதைக் கண்டித்து குரல் எழுப்பப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 10 முக்கிய தீர்மானங்கள்:
1.மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்.
2. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநருக்கு எதிராக குரல் எழுப்பப்படும்.
3. அரசியல் சட்ட பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் எண்ணம் உள்ளவர்களை ஆளுநர்களாக நியமித்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவதைக் கண்டித்து குரல் எழுப்பப்படும்.
4. தமிழை புறக்கணித்து சமஸ்கிருதம், இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
5. பொது விநியோக திட்டத்தின் கீழ் கோதுமை, பருப்பு போன்ற பொருட்களுக்கு மானியம் குறைப்பைக் கண்டித்து குரல் எழுப்பப்படும்.
6. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைப்புக்குப்ம் பதில் இந்த மூன்றின் விலையையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியதைக் கண்டித்து குரல் எழுப்பப்படும்.
7. அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், வருமான வரித்துறை, நீதித்துறை என அனைத்தின் சுதந்திரத்தையும் பறித்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்தி வருவதைக் கண்டித்து குரல் எழுப்பப்படும்.
8. எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்துவதற்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பப்படும்.
9. தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு என அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டி நிற்பதைக் கண்டித்து கேள்வி எழுப்பப்படும்.
10. அவசர அவசரமாக கொண்டுவரத் துடிக்கும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களை எதிர்த்து திமுக எம்.பிக்கள் குரல் எழுப்புவார்கள்.












Click it and Unblock the Notifications