“நாங்க தவெக-வை கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே”.. விஜய் பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு ரியாக்ஷன்!
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை திமுக எப்போதும் கூட்டணிக்கு வாங்க என கூப்பிடவே இல்லையே என திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற பொது நோக்கில் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுகவும் பாஜகவும் அறிவித்துள்ளன. இன்னும் பாமக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் உள்ளனர்.

சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், திமுக - பாஜகவுடன் எப்போதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ தவெக கூட்டணி வைத்துக் கொள்ளாது என அறிவித்தார்.
அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுமே சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க விஜய் தலைமையிலான தவெக தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தன. பாஜக தலைவர்கள், திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தான் நேற்று நடந்த தவெகவின் செயற்குழுக் கூட்டத்தில், நடிகர் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என சிறப்புத் தீர்மானத்தை அதிரடியாக நிறைவேற்றியுள்ளது தவெக. அதிமுக - பாஜக தலைவர்கள் இடைவிடாமல் விடுத்த கூட்டணிக்கான அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார் நடிகர் விஜய்.
"கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜக உடன் கூடிக் குலைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை நமது தமிழக வெற்றிக் கழகம்" என்று தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம் விஜய் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, 'விஜய் கட்சியை கூட்டணிக்கு வாங்கன்னு நாங்க கூப்பிடவே இல்லையே' என கிண்டலாக பதில் அளித்தார்.
முன்னதாக, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி விஜய் பேச்சு பற்றி பதில் அளிக்கும்போது, "தவெக தனித்து தேர்தலில் போட்டியிடுவது திமுகவுக்கு சவாலாக இல்லை. தவெகவும் பாஜகவும் தான் ஒருவருக்கொருவர் சவாலாக இருக்கலாம். பலர் தனித்துப் போட்டியிடலாம், அது அவர்களது தேர்வு. அதற்காக திமுக கூட்டணிக்கு வெற்றியில் பாதிப்பு ஏற்படாது. மக்கள் தரும் ஆதரவை பார்க்கும் போது திமுக கூட்டணி முன்னணியில் இருப்பது தெளிவாக தெரிகிறது" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications