திவால் ஆன நகைக்கடை போல மாறிய ஹரி நாடார்.. லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு? சூடாக பேட்டி
சென்னை: லோக்சபா தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்பது குறித்து ஹரி நாடார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். எப்போதும் கழுத்து நிறைய நகைகளுடன் இருக்கின்ற ஹரி நாடார் இன்று கழுத்தில் நகைகள் இன்றி காணப்பட்டார். மேலும், நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒரு வேட்பாளரை கூட நிறுத்தாமல் திமுக புறக்கணித்து இருப்பது மன வேதனையை அளிக்கிறது என்று ஆவேசமாக பேட்டி அளித்தார்.
ஹரி நாடார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சமூக நீதி சமூக நீதி என்று பேசக்கூடிய திராவிட அரசு, திமுக அரசு இந்த லோக்சபா தேர்தல் 21 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆனால் இதில் ஒரு வேட்பாளர் கூட நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை நினைக்கும் போது ஒட்டுமொத்த நாடார் சமுதாயமும் உருக்குலைந்து போய் இருக்கிறார்கள்.

திமுக புறக்கணித்துவிட்டது: தமிழகத்திலேயே 2வது பெரிய சமுதாயமாக இருப்பது நாடார் சமுதாயம் தான். நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒரு வேட்பாளரை கூட நிறுத்தாமல் திமுக புறக்கணித்து இருப்பது மன வேதனையை அளிக்கிறது. ஏற்கனவே ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாடார்கள் பலம் என்ன? நாடார்கள் நினைத்தால் என்ன செய்வார்கள் என்பதை எல்லாம் நாங்கள் நிரூப்பித்து இருக்கிறோம். இதையெல்லாம் அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை மறந்திருந்தால் அவர்களுக்கு மீண்டும் இந்த தேர்தல் தகுந்த பாடத்தை புகட்டும்.
விரைவில் மீட்டு எடுப்போம்: இந்த தேர்தல் மட்டுமல்ல, வருகிற தேர்தலில் கூட நாடார்களை சேர்ந்த ஒரு சில இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் கூட சுயலாபத்திற்காக தேர்தல் நேரத்தில் வேறு கட்சிகளுடன் கூட்டணிக்காக சென்று விடுகிறார்கள். அவர்களை நம்பி இருக்கின்ற, நாடார் சமுதாயத்திற்கு ஒரு அரசியல் அங்கீகாரம் வந்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களின் அனைவரது கனவுகளும் பொய்யாகி கொண்டு இருக்கிறது.
இந்த கால சூழ்நிலைகள் எல்லாம் மாறும். விரைவில் மாறும். நாடார்கள் கோட்டை என்று சொல்கிற இடங்களையெல்லாம் விரைவில் மீட்டு எடுப்போம். இந்த பணியில் எந்தவித தொய்வில்லாமல் ஹரி நாடார் செயல்படுவார் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
யாருக்கு ஆதரவு: இந்த லோக்சபா தேர்தலில் ஹரி நாடார் யாருக்கு ஆதரவு அளிப்பார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து ஹரி நாடார் கூறியதாவது:- 2024 லோக்சபா தேர்தலை பொறுத்தமட்டில், நாடார் சமுதாயத்தை புறக்கணித்த கட்சிகளுக்கு நாங்கள் தகுந்த பாடத்தை கொடுப்போம். நாடார் வேட்பாளர்கள் நிற்கக்கூடிய தொகுதிகளில் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.
இரண்டு வேட்பாளர்களுமே நாடார்கள் என்றால், உதாரணத்திற்கு கன்னியாகுமரி தொகுதியை எடுத்துக்கொண்டால் இரண்டு வேட்பாளர்களுமே நாடார்கள் தான். எனவே அங்கு நாங்கள் யாருக்கு ஆதரவு அளிப்போம் என்றால் இந்த தொகுதியில் இதுவரை நாடார்களுக்காக யார் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்களோ? எங்களுக்காக யார் உழைத்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications