இங்க இருந்த காஷ்மீர் எங்க? திமுக வெளியிட்ட இந்திய மேப்பால் சர்ச்சை.. பாஜக எதிர்ப்பால் ‛டெலிட்’
சென்னை: ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை நீக்கிவிட்டு பதிவிட்ட திமுகவின் அயலக அணி போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திமுக அயலக அணி அந்த பதிவை நீக்கிவிட்டு சரியான இந்தியா மேப்பை பதிவிட்டு தவறை திருத்தி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக உள்ளது. திமுக தலைவரான ஸ்டாலின் முதல்வராக செயல்பட்டு வருகிறார். திமுக சார்பில் பல்வேறு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர்கள் அணி, அயலக அணி என்று தனித்தனியாக அணிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அணிகளுக்கு என்று தனித்தனியாக சமூக வலைதள பக்கங்கள் உள்ளன. இதில் திமுகவின் சாதனைகள், திமுக ஆட்சியில் தமிழகம் செய்த சாதனைகள் பற்றிய பதிவுகள் அவ்வப்போது பதிவிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் திமுக அயலக அணி போட்ட பதிவு தற்போது சர்ச்சையாகி உள்ளது. அதாவது நேற்றைய தினம் திமுக அயலக அணிசார்பில் இரவு 7.48 மணிக்கு எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதில், ‛‛திராவிட மாடல் ஆட்சியில் கல்வியை போல் பொருளாதாரத்திலும் வளர்ந்து வரும் தமிழ்நாடு'' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி இந்திய மேப்பை பதிவிட்டு அதில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் மகாராஷ்டிராவுக்கு (13.3 சதவீதம்) அடுத்த இடத்தில் தமிழ்நாடு 8.9 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருக்கிறது என்று பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பதிவில் இந்திய மேப் தவறாக இருந்தது.

அதாவது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி என்பது இந்தியா மேப்பில் இடம்பெறவில்லை. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை திமுக, பாகிஸ்தானுக்கு தாரை வார்த்துள்ளது என விமர்சனம் செய்தனர். குறிப்பாக பாஜக தமிழக செயலாளர் எஸ்ஜி சூர்யா திமுக அயலக அணியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக எஸ்ஜி சூர்யா, ‛‛திமுக இப்படி செய்வது இது முதல் முறையல்ல. 2020ல் உதயநிதி ஸ்டாலின் இதே தவறை வீடியோ ஒன்றில் செய்தார். அப்போது நான் போலீஸ் கமிஷனரிடம் புகாரளித்தேன். அதன்பிறகு இந்திய மேப் தவறாக இருந்த வீடியோவை நீக்கிவிட்டனர். இதனால் திமுக மற்றும் திமுகவினர் பிற பிரிவினர் பாகிஸ்தான் மீது பற்று கொண்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை'' என விமர்சனம் செய்திருந்தார்.
அதேபோல் பலரும் விமர்சனம் செய்தனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து திமுகவின் அயலக அணி அந்த பதிவை டெலிட் செய்துள்ளது. அதன்பிறகு இன்று காலை 11.08 மணிக்கு திமுக அயலக அணி சார்பில் சரியான இந்திய மேப் பதிவிடப்பட்டு மீண்டும் அந்த பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கூட அந்த பதிவுக்கு கீழே கமெண்ட்டில் திமுக அயலக அணி பதிவிட்ட பழைய பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications