"காசு தர மாட்டியா!" கோயம்பேட்டில் கடையை சூறையாடிய திமுக நிர்வாகிகள்! உடனடியாக கைது செய்த போலீசார்
சென்னை: கோயம்பேட்டில் கடை நடத்தி வந்த பாஜக தொண்டரின் கடையைச் சூறையாடிய சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோயம்பேடு பகுதியில் இயங்கி வந்த டிபன் கடையைச் சிலர் நேற்று முன்தினம் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட நபர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் இந்த விவகாரம் குறித்து இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் திமுக இளைஞரணி நிர்வாகிகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நன்கொடை
சென்னை கோயம்பேடு பகுதியில் சேமாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன்.. 48 வயதான இவர், சென்னை கோயம்பேடு சந்தையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த 3ஆம் தேதி முத்து மற்றும் விஸ்வநாதன் என இருவர் சபரிமலைக்கு மாலை போட்டுள்ளதாகவும் ஐயப்பன் பூஜை செய்யப் பணம் வேண்டும் என்று அங்கிருந்து தள்ளுவண்டிக் கடைகளில் நன்கொடை வசூலித்துள்ளனர்.

மோதல்
அவர்கள் தேவந்திரனின் தள்ளுவண்டிக் கடைக்கும் வந்துள்ளனர். தேவந்திரனிடம் ஐயப்பன் கோயிலுக்குப் பூஜை செய்ய ரூ.500 வேண்டும் எனக் கேட்டுள்ளனர். தேவேந்திரன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதாகத் தெரிகிறது. அப்போது இரு தரப்பிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், பணம் வசூலிக்க வந்த முத்துவும் விஸ்வநாதனம், பணம் தரவில்லை என்றால் கடை போட முடியாது என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

சூறையாடல்
மேலும், சபரிமலைக்கு மாலை போட்டுள்ளதால் இப்போது எதுவும் செய்யவில்லை என்றும் ஆனால் திரும்பி வரும்போது கடையே இருக்காது என்றும் மிரட்டியதாகத் தெரிகிறது. இருப்பினும், அப்போது எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. விஸ்வநதான் சமீபத்தில் தான் சபரி மலைக்குச் சென்று திரும்பியுள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு முத்துவுடன் சென்று தேவேந்திரனின் கடையை அவர்கள் அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.

கைது
இந்தச் சம்பவம் குறித்து தேவேந்திரன் கோயம்பேடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நன்கொடை கேட்டு மிரட்டிய விஸ்வநாதன், மற்றும் முத்து, 27 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முத்து வட்ட இளைஞர் அணி செயலராக உள்ளவர் என்பதும் விஸ்வநாதன் திமுக உறுப்பினர் என்பதும் தெரிய வந்தது.

என்ன பிரச்சினை
மேலும், திமுக சார்பில் கடந்த மாதம் அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நலதிட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அதில் பயனாளிகளுக்குக் குக்கர் வழங்கப்பட்டுள்ளது. தேவேந்திரன் மனைவி தனக்கும் டோக்கன் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இருப்பினும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு டோக்கன் வழங்க முடியாது விஸ்வநாதன் மற்றும் முத்து தெரிவித்துள்ளனர். அப்போதே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே திமுகவில் இருந்த தேவேந்திரன், பாஜகவில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications