நாடார் வாக்குகள்.. அதிமுகவில் இருக்கும் பிரச்சனை.. கனிமொழியை வைத்து காய் நகர்த்தும் ஸ்டாலின்!
சென்னை: தென் மாவட்டங்களில் நாடார் சமூக வாக்குகளை அறுவடை செய்வதற்காக திமுக தலைமை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதிமுகவில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளில் 3 பேர் மட்டுமே மாவட்டச் செயலாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவில் இருக்கும் இந்த சிக்கலை பயன்படுத்தி திமுக சில வியூகங்களை வகுத்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக மக்களை சந்தித்து பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், திமுக தலைமை நின்று நிதானமாக உட்கட்சி பூசலை கட்டுப்படுத்தி வருகிறது.

திமுக தலைமை இம்முறையும் தென் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியது. 2021 சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் திமுக கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றியது. 18 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. அதில் தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாடார் சமூக மக்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர்.
இதனால் நாடார் சமூக மக்களை தங்கள் பக்கம் கொண்டு வர திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கு பின்னணியில் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையே காரணமாக பார்க்கப்படுகிறது. அண்மையில் ஒபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற ஒரே நாடார் சமூக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தான். அவர் தற்போது திமுகவில் ஐக்கியமாகிவிட்டதால், அதிமுகவில் நாடார் சமூக எம்எல்ஏ-க்கள் யாருமே இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. மறுபக்கம் திமுக கூட்டணியில் மட்டும் 13 நாடார் சமூக எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனர்.
அதேபோல் தென் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு மட்டுமே மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் நாடார் சமூகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற பார்வை எழுந்துள்ளது. அதிமுகவின் இந்த பலவீனத்தை திமுக தங்களுக்கு சாதகமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே 4 மாவட்டங்களுக்கான பொறுப்பு கனிமொழி வசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி மற்றும் தென்காசியில் கனிமொழிக்கு என்று தனியாக மிகப்பெரிய ஆதரவும் அதிகரித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் திமுக பல்வேறு ஸ்கெட்ச் போட்டு பணியாற்றி வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications