30 தொகுதிகளில் உதய சூரியன் சின்னம்.. ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்.. திமுகவின் முடிவு.. அப்போ கூட்டணி?
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் இந்த முறை 4 முனை போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னம் மட்டும் 30 தொகுதிகளில் போட்டியிடும் என்று தகவல்கள் வருகின்றன.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி ஆலோசனைகள் நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய அளவில் இந்திய கூட்டணி முறியும் நிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி இந்திய கூட்டணியில் லோக்சபா தேர்தலை மேற்கு வங்கத்தில் சந்திக்க மாட்டேன் என்று அறிவித்துவிட்டார்.

முறியும் இந்திய கூட்டணி: அதேபோல் ஆம் ஆத்மியும் பஞ்சாப்பில் இந்தியா கூட்டணியில் போட்டியிடாமல் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துவிட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தமிழ்நாட்டில் இந்த முறை 3வது அணி புதிதாக ஒன்று உருவாக்கி நாம் தமிழரோடு சேர்த்து 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 4 கூட்டணிகள்: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக - காங்கிரஸ் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. வரும் நாட்களில் மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
அதன்படி இந்த முறையும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக , விடுதலை சிறுத்தைகள், இன்னும் சில உதிரி கட்சிகள் உடன் திமுக கூட்டணி வைக்க உள்ளது.
திமுக டீம்: நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய உள்ள குழுவில் குழு தலைவராக டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.
குழு உறுப்பினர்கள் : கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) , எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
திமுக திட்டம் என்ன?: லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது. மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 - 30 இடங்களில் திமுகவின் உதய சூரியன் சின்னம் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5-7 இடங்கள்தான் கொடுப்போம்.. உங்கள் கட்சியில் தேர்வாக உள்ளவர்களின் லிஸ்டை தயார் செய்யுங்கள் என்று தகவலை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தெரிவிக்க உள்ளதாம்.
அதிமுக கூட்டணி: இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகளை அதிமுக தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது.
லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்தது.
கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக நேற்று அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை.
இந்த முறை பெரும்பாலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 40 தொகுதிகளிலும் போட்டியிடும், புதிய பாரதம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
நாம் தமிழர்: இது போக மூன்றாவதாக நாம் தமிழர் தனியாக போட்டியிடும். எப்போதும் போல 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும்.
பாஜக நான்காவது அணி; இந்த நிலையில்தான் பாஜக இன்னொரு அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + பாமக + தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications