கொடநாடு கொலை;கொள்ளை... சஜீவனை முதலமைச்சர் அருகில் வைத்துக் கொள்வது ஏன் -ஸ்டாலின் கேள்வி
சென்னை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் நீதிமன்ற வாக்குமூலத்தில் இடம்பெற்ற சஜீவனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் அருகில் வைத்துக்கொள்வது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் நீலகிரி மாவட்ட திமுகவினருடன் காணொலி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்.
மேலும், அந்த காணொலிப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது;

என்ன செய்தார்கள்
கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தோம் அ.தி.மு.க. ஆட்சியால் சொல்ல முடியுமா? கடந்த பத்தாண்டு காலத்தில் எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க.வுக்குள் நடந்த குழப்பங்கள் - அதிகார வெறியில் நடந்த பதவிச் சண்டை காட்சிகளைத் தான் தமிழ்நாடு பார்த்ததே தவிர வேறு எதையும் பார்க்கவில்லை.

பதவியை காப்பாற்ற
முதல் ஐந்து ஆண்டு காலம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் ஜெயலலிதா. அடுத்த ஐந்து ஆண்டு காலம் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் பழனிசாமி. அதனால்தான் பத்தாண்டு காலத்தில் தமிழகம் பெரும் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது.இந்த பாதாளத்தில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான போர்தான் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்!

கொலை;கொள்ளை
ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் உள்ள பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளைச் சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப் பெரிய சாதனை என்ன என்றால், ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளை நடந்தது, கொலையும் நடந்தது, மர்ம விபத்துக்கள் நடந்தது என்பதுதான்.

சர்ச்சை நபர்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சஜீவன், இரண்டு நாட்களுக்கு முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்கு வந்தபோது அரசு விழாவில் அருகில் இருந்துள்ளார். உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி கலந்து கொண்டு இருக்கிறார்.

சஜீவன் பங்கேற்பு
உயரதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசுக் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்றார். இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் சஜீவன் என்பவர் கலந்து கொண்டார். இந்த சஜீவன், அவரது தம்பி சுனில் ஆகிய இருவர் பெயரும் நீதிமன்ற வாக்குமூலத்தில் இருக்கிறது.

முதல்வருக்கு கேள்வி
இந்த நிலையில் சஜீவனுக்கு அ.தி.மு.க.வில் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் பதவியும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினரே நீலகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கோத்தகிரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னால் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். அதன்பிறகும் சஜீவனை தனக்கு அருகில் எடப்பாடி பழனிசாமி வைத்துக் கொள்கிறார் என்றால் கொடநாடு விஷயத்தில் எப்படி உண்மைகள் வெளியே வரும்?












Click it and Unblock the Notifications