VVPAT இயந்திரத்தில் முறைகேடு? ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டது இப்படித்தானா! பகீர் குற்றச்சாட்டு!
சென்னை: கொளத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின்போது.. வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் வைக்கப்படவில்லை என்று திமுகவினர் புகார் அளித்திருக்கின்றனர். இந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றத்தை நாட திமுக திட்டமிட்டிருக்கிறது.
ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது எனில், பதிவான வாக்குகளை தேர்தல் ஆணையம் கவனமாக பாதுகாத்து வைக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்தவரை கன்ட்ரோல் யூனிட், பாலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகியவை தனித்தனியாக பிரித்து சீல் வைக்கப்படும். பின்னர் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட இவை மீண்டும் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்படும்.

ஒருவேளை தொகுதியில் தோற்ற வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையில் தனக்கு திருப்தி இல்லை என நினைத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்க கேட்கலாம். அதற்காகவே இப்படியான பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
கொளத்தூர் தொகுதியில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். இந்த தோல்வி குறித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகத்தை கிளப்பிய திமுகவினர், மீண்டும் சோதனை செய்ய கேட்டனர். எனவே கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த 29ம் தேதி முதல் தொடங்கின.
இன்று தேர்தல் அதிகாரி சமீரன் முன்னிலையில் ஆய்வு பணிகள் தொடங்கின. அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் (VVPAT) இரண்டு சீல்கள் இல்லாமல் இருக்கின்றன. அட்ரஸ் டேக் புதியதாக கட்டப்பட்டிருக்கிறது.
கன்ட்ரோல் யூனிட், பாலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகியவை தனித்தனியாக பிரித்து சீல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், விவிபாட்-ல் சீல் மிஸ்ஸானது எப்படி? என்று கேள்வி எழுந்திருக்கிறது. அதேபோல இதில் கட்டப்பட்டிருந்த அட்ரஸ் பேப்பரில் EVM சீரியல் நம்பர் இருக்கும். இந்த பேப்பரில் தொகுதியின் பெயர், வாக்குச்சாவடி எண், தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுடைய கையெழுத்து இருக்கும். ஆனால், பேப்பர் புத்தம் புதியதாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
சீல் இல்லாமல் இருப்பது எந்திரத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. எனவே உயர்நீதிமன்றத்தில் இது குறித்து தேர்தல் வழக்கை தொடர திமுக திட்டமிட்டிருக்கிறது. இந்த வழக்கில் திமுகவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால்.. நிச்சயம் மறு தேர்தல் நடைபெறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தேர்தல் அதிகாரி சமீரன் இது குறித்து திமுகவினருக்கு உரிய விளக்கம் அளித்திருப்பதாகவும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். வேட்பாளர்கள் வாரியாக பதிவு செய்யப்பட்ட வாக்குகள் சரி பார்க்கப்பட்டன. இவிஎம் மற்றும் விவிபாட் இயந்திரங்களும் சரி பார்க்கப்பட்டன. எனவே குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
