நம்பர்-1 தமிழ்நாடு..இது உங்க ரிப்போர்ட் தானே..லிஸ்டை நீட்டிய திமுக!பாஜகவுக்கு கிடுக்குப்பிடி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜவுளித் துணிகள், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்களின் ஏற்றுமதிகளில் இந்தியாவில் தமிழ்நாடுதான் தலைசிறந்த மாநிலம் என ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி என பாஜகவுக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"ஒன்றிய அரசின் ஆய்வு : நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் காணாமல் போய்விடும் என்று கூறிய பிரதமர் என்னும் "பெரிய பதவியில்" உள்ளவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு தெரியாமல் சில நாள்களுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து வாய்ஜாலம் காட்டினார்.

DMK replies to BJP that Tamil Nadu is the best state in India

அவர் தலைமையில் இதுவரை இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் தமிழ்நாட்டின் உண்மை நிலையினை விளக்கி ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

7 துறைகளில் முன்னணி: சில நாட்களுக்கு முன் 7 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலம் என்பதை ஒன்றிய அரசின் ஆய்வு அமைப்புகள் வெளியிட்டன. தற்போது, மேலும் 3 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலம் என்பதை தம்முடைய ஆய்வு அறிக்கைகளின் மூலம், அறிந்தும் அறியாமல் - புரிந்தும் புரியாமல் - இழித்தும் பழித்தும் தி.மு.க.வை பற்றிப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய "பெரிய பதவியில்" உள்ளவர்களுக்கு மீண்டும் எடுத்துச் சொல்லிப் புரியவைத்துள்ளன.

ஜவுளித் துணி: ஜவுளித் துணிகள் ஏற்றுமதி குறித்து 2022-2023-ஆம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசின் நிர்யாத் (NIRYAT) நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் தேசிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த ஜவுளித் துணிகளின் மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 22.58 சதவிகிதம் என அறிவித்து ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு 35.38 பில்லியன் அமெரிக்க டாலர் இதில் முதலிடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 7.990 பில்லியன் அமெரிக்க டாலர். அடுத்து இரண்டாம் இடத்தில் குஜராத் மாநிலம் 4.378 பில்லியன் அமெரிக்க டாலர். மூன்றாம் இடத்தில் மகாராட்டிரம் 3.784 பில்லியன் அமெரிக்க டாலர் என்று குறிப்பிட்டு தமிழ்நாடு ஏற்றுமதி செய்து ஜவுளிப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஏற்றுமதியிலும் முதலிடம்: தேசிய இறக்குமதி – ஏற்றுமதி – வர்த்தக ஆண்டாய்வு பதிவுகள் குறித்த அறிக்கையில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறித்து அறிவித்துள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவிலிருந்து ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு மிக அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் மொத்த மதிப்பு 16.19 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதில் 5.30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு அடுத்து கர்நாடகம் இரண்டாம் இடத்தில் 4.52 பில்லியன் அமெரிக்க டாலர். உத்தரபிரதேசம் மூன்றாம் இடத்தில் 2.27 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளது. மராட்டியம், குஜராத் மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலிடம்: 2022-2023-ஆம் நிதியாண்டுக்கான தோல் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு குறித்து ஒன்றிய அரசின் நிர்யாத் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு 2022-2023-ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தோல் பொருட்களின் மொத்த மதிப்பு 4.27 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில், இதில், 43.20 சதவிகித தோல் பொருள்களை அதாவது 2.048 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தோல் பொருள்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பாராட்டு முத்திரையை வெளியிட்டு தமிழ்நாட்டின் பெருமையைத் தரணிக்குப் பறைசாற்றியுள்ளது.

ஒன்றிய அரசின் ஆய்வு : இப்படி ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே தமிழ்நாடு பெரும்பாலான முக்கிய துறைகளில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. பா.ஜ.க.ஆளும் மாநிலங்கள் பல்வேறு துறைகளிலும் பின்தங்கியிருப்பது மட்டுமல்லாமல், எவ்வித வளர்ச்சியுமின்றி குன்றியுள்ளதையும் இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியும் முன்னேற்றமும் இன்றி மிகவும் பின்தங்கி இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

புள்ளி விவரங்கள்: ஒன்றிய அரசின் பிரதமர் அவர்களும், ஒன்றிய அரசின் அமைச்சர் பெருமக்களும், பா.ஜ.க.உடன் கள்ள உறவு வைத்துள்ள அ.தி.மு.க.வினரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிகளைப்பற்றிக் குறைகூறி வருவது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல. உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறி, போலியான விளம்பரம் தேடுபவர்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாகப் பொதுமக்களுக்கு ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+