“திமுக என்பது ஆலமரம்.. தக்க பதிலடி கொடுப்போம்” தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி ரியாக்ஷன்
சென்னை: "திமுக என்பது ஒரு ஆலமரம், விமர்சனங்களை எதிர்கொள்ளும். காய்த்த மரம்தான் கல்லடி படும், யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவைத் தான் எதிர்ப்பார்கள்; தக்க பதிலடி கொடுப்போம்" என தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் தனது பேச்சில் பாஜகவையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் கொள்கை எதிரி என்றும், திராவிட மாடல் என ஏமாற்றும் குடும்பக் கட்சி அரசியல் எதிரி என்றும் பேசிய விஜய், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கே செல்லாது என்று எச்சரித்தார்.

மேலும், "இங்கே ஒரு கூட்டம் ரொம்பக் காலமாக ஒரே பாட்டை பாடிக்கொண்டு, யார் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட அரசியல் சாயத்தை பூசிக்கொண்டு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறது. எப்போது பார்த்தாலும் பாசிசம் என்று பேசுகிறது. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பேசுவது என்ன பாயாசமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தி விட்டு திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை ஏமாற்றுகின்றனர்" எனக் கூறினார்.
இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவைத்தான் எதிர்ப்பார்கள். காய்த்த மரம்தான் கல்லடி படும். திமுக என்பது ஒரு ஆலமரம். விமர்சனங்களை எதிர்கொள்ளும். தக்க பதிலடி கொடுப்போம். ஆளுநர் முதல் நிறைய பேர் திமுகவை எதிர்த்து பேசியிருக்கிறார்கள்.
எந்த விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளும் சக்தி எங்களிடம் உண்டு. வார்த்தைக்கு வார்த்தை பதில் அளிக்க முடியாது. திமுக என்பது தேம்ஸ் நதியைப் போன்றது. யார் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. திமுகவினர் ஒரே குடும்பம். நம் குடும்பம் ஒன்றாக செயல்பட்டால் எந்த சக்தியாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது." என்று விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications