திமுக தலைவராக அழகிரி பதவி ஏற்பார்.. அமைச்சர் ஜெயக்குமார் பரபர ஆருடம்!
மதுரை: திமுக தலைவராக மதுரை மண்ணின் மைந்தர் அழகிரிதான் பதவி ஏற்பார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
4 தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அமைச்சர் பிரச்சாரம்
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ‘நான் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி பகுதியில் பிரசாரம் செய்தேன். அதே பகுதியில் தான் ஸ்டாலினும், பிரசாரம் செய்தார்.

பாடலே சாட்சி
அப்போது அங்கு ''சென்று வா மகனே சென்று வா'' என்ற பாடல் பாடியது. அது கோவலன் கதைப்பாடல். கோவலன் சென்ற பிறகு திரும்பி வரவே இல்லை. தி.மு.க.,வின் கதையும் அது தான். ஸ்டாலின் இனி திரும்பி வரவே முடியாது என்பதற்கு அந்த பாடலே சாட்சி.

அவர்கள் சொல்லித்தான்
தற்போது தி.மு.க.,வில் நடக்கும் சில செய்திகள் சந்தேகம் தருகின்றன. கனிமொழி மற்றும் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தது ஸ்டாலின் சொல்லித்தான் என்று தி.மு.க., வட்டாரங்களில் பேசுகின்றனர்.

அழகிரிதான் தலைவர்
தற்போது நடைபெறும் தேர்தலில் தி.மு.க., தோல்வி அடையும் பட்சத்தில், தி.மு.க., தலைவராக மதுரை மண்ணின் மைந்தர் மு.க.அழகிரி தான் தலைவராக பதவி ஏற்பார்,‘ இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

கொளுத்திபோட்ட அமைச்சர்
ஏற்கனவே அழகிரிக்கும் திமுகவுக்கும் ஏழாம்பொறுத்தமாக உள்ளது. இந்நிலையில் திமுகவின் அடுத்த தலைவர் அழகிரிதான் என அமைச்சர் ஜெயக்குமார் கொளுத்தி போட்டது ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications