விஸ்வரூபம் எடுக்கும் செந்தில் பாலாஜி.. சாட்டையை கையில் கொடுத்த ஸ்டாலின்! இனி கோவை தான் குறியே!
சென்னை: அமைச்சராக இல்லாவிட்டாலும் அதற்குண்டான எல்லா அதிகாரங்களுடன் கரூர் மாவட்டத்தில் அரசியல் செய்து வருகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதிமுகவில் இருந்த போதும் பலம் பொருந்திய நபராக இருந்தவர், தற்போது திமுக ஆட்சியிலும் அதே நிலையிலேயே தொடர்கிறார். இந்த நிலையில் தற்போது கொங்கு மண்டலத்தில் அதிமுகவை சாய்க்க களம் இறக்கப்பட இருக்கிறார் செந்தில் பாலாஜி. மேலும் இந்த முறை கோவையில் ஏதாவது ஒரு தொகுதியில் அவரை போட்டியிட வைக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சி காலத்தில் எம்எல்ஏ ஆகவும் அமைச்சராகவும் இருந்தார். ஒரு சில காரணங்களால் ஜெயலலிதாவால் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதற்கு பிறகு அமைதியாக இருந்த அவர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு டிடிவி தினகரன் தீவிர ஆதரவாளராக மாறினார்.
சில காரணங்களால் எம்எல்ஏ பதவியும் பறிபோன நிலையில் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு செந்தில் பாலாஜிக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்தது. தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார்.

செந்தில் பாலாஜி
எடுத்த எடுப்பிலேயே கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவியும் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் விஜயபாஸ்கரை நேரடியாக எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முக்கியத்துவம் வாய்ந்த மதுவிலக்கு, மின்சாரம் ஆகிய துறைகளை கவனிக்கும் பொறுப்பு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றிய செந்தில் பாலாஜியின் செல்வாக்கு திமுக தலைமையிடம் உயரத் தொடங்கியது.
திமுக
தொடர்ந்து கோவை மண்டல பொறுப்பாளராகவும் பொறுப்பு அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டார். அடுத்தடுத்து பிரம்மாண்ட மாநாடுகளையும் நடத்திக் காட்டினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றிய நிலையில் அதற்கு பிறகு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்தார். இதனால் செந்தில் பாலாஜிக்கான ஆதரவு திமுக தலைமையிடம் அதிகரித்தது.
அதிமுக
இடையில் வழக்கு காரணமாக சிறை சென்றார் செந்தில் பாலாஜி. அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. இருந்தபோதும் கோவை, கரூரில் அமைச்சருக்கு உண்டான அதிகாரங்களுடன் தான் வலம் வருகிறார் செந்தில் பாலாஜி என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு கூடுதல் பொறுப்பை வழங்கி இருக்கிறது திமுக தலைமை. ஏற்கனவே சொன்னது போல கோவையில் பலம் பொருந்திய கட்சியாக அதிமுக இருக்கிறது.
எஸ்பி வேலுமணி
சமூக செல்வாக்கு, மக்கள் உடனான ஆதரவு என அசைக்க முடியாத சக்தியாக அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி வலம் வருகிறார். அதனால் தான் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளும் அதிமுக வசமானது. மேலும் 2001, 2011, 2021 என கடைசியாக நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் திமுகவின் நிலைமையோ தலைகீழ் தான். 1996 இல் அனைத்து தொகுதிகளிலும் வென்ற திமுக, 2006ல் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது.
திமுக கோவை அரசியல்
2016 இல் ஒரு தொகுதியில் வென்ற நிலையில் 2011 தேர்தல் முடிவுகள் பூஜ்ஜியமாகவே கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், 2021ல் கோவையில் திமுகவுக்கு என ஒரு எம்எல்ஏ கூட இல்லை. இதனால் தான் கோவையில் இழந்த செல்வாக்கை மீட்க செந்தில் பாலாஜி கோவை மண்டல பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் தேர்தலில் நிச்சயம் கோவையின் அனைத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்பதற்காக அவருக்கான அதிகாரங்களையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் செந்தில் பாலாஜி
கோவையில் திமுகவின் வளர்ச்சிக்காக எந்த வித நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனவும் செந்தில் பாலாஜிக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது திமுக தலைமை. இதை அடுத்து கோவை திமுகவில் இருக்கும் கோஷ்டி பூசல்கள், பிற கட்சிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் என பட்டியல் தயாரித்து அவர்களை தூக்கி அடிக்க தயாராகி வருகிறார் செந்தில் பாலாஜி என்கின்றனர். மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி கோவையில் களம் இறக்கவும், அது தொடர்பாக அவரிடம் திமுக தலைமை பேசியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் திட்டம்
இது ஒரு புறம் இருக்க, கோவையில் காலம் காலமாக அரசியல் செய்து வந்தவர்கள் தற்போது செந்தில் பாலாஜியின் திடீர் விஸ்வரூபத்தால் சற்று மனக்கசப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் பலரும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களாக மாறி இருக்கும் நிலையில், கோவையில் அவர் நேரடியாக களமிறங்குவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனால் 2026 சட்டமன்றத் தேர்தல் நிச்சயம் கோவையில் பெரிய பிரளயம் வெடிக்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications