"மீனாகுமாரி கேரவனில் பயணிக்கும் உங்களுக்கு பாமர மக்களின் தேவை புரியுமா?” விஜய் மீது வைஷ்ணவி அட்டாக்
சென்னை: "சொகுசு காரிலும் மீனா குமாரி கேரவனிலும் பயணிக்கும் உங்களுக்கு பாமர மக்களின் தேவைகள் தெரியாது. அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் திமுக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அத்தகைய திட்டங்களால் பயனடைந்த மக்களுக்கே தெரியும் திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு' என்று" என திமுக வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் முதல் தேர்தல் சுற்றுப்பயணம் இன்று தொடங்குகிறது. விஜய் தனது அரசியல் பிரச்சாரப் பயணத்தின் தொடக்கமாக திருச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதுதொடர்பாக விஜய் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தனது திருச்சி சுற்றுப்பயணம் குறித்து விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அந்த அறிக்கையில் தற்போதைய திமுக அரசை கடுமையாக விமர்சித்தும் இருந்தார். திமுக அரசு மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் தெரிவித்திருந்தார். மேலும், தனது பிரச்சார பயணத்துக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் திமுகவில் இணைந்த வைஷ்ணவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜயை நேரடியாக விமர்சித்துள்ளார்.
வைஷ்ணவி தனது பதிவில், "மக்களின் மனமறிந்த அரசியல், தோழமையுடன் கூடிய அரசியல் என நடிகர் என்ற பிம்பத்தை வைத்து உருட்டிக் கொண்டிருக்கும் விஜய் அவர்களே! முதலில் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா? கட்சித் தொண்டர்களை தொட விடாமல் பவுன்சர்களை வைத்து தாக்குவதும், தடுப்பு கம்பிகளில் கீரிஸ் தடவியும் நடந்து கொள்கிற நீங்கள் மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்கிறீர்கள். இப்படிப்பட்டவர் ஒரு இயக்கத்தின் தலைவராக இருக்க தகுதியற்றவர்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், "சொகுசு காரிலும் மீனா குமாரி கேரவனிலும் பயணிக்கும் உங்களுக்கு பாமர மக்களின் தேவைகள் தெரியாது. அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் திராவிட முன்னேற்றக் கழகம் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அத்தகைய திட்டங்களால் பயனடைந்த மக்களுக்கே தெரியும் 'திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு' என்று" என அவர் தெரிவித்துள்ளார்.
வைஷ்ணவி, தவெகவை விட்டு விலகி திமுகவில் இணைந்த பின் தொடர்ந்து விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தான் விஜய்யின் முதல் அரசியல் பிரச்சார பயணத்தையும் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications