திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் சிபிஐ கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். திமுக பிரம்மாண்ட கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறது.

திமுக இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு
ஆனால் அதிக கட்சிகள் இருப்பதே தொகுதி பங்கீட்டில் சிக்கலை உருவாக்கியுள்ளது. திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று சிபிஐ, சிபிஎம் தங்களின் நிலைப்பாட்டை உறுதியாக சொல்லியுள்ளதால் திமுக தீர்வு எட்ட முடியாமல் திக்கு முக்காடி வருகிறது.
4ம் கட்ட பேச்சுவார்த்தை
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே மூன்றாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே இன்று காலை நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது, ஏற்கனவே அவர்களிடையே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
உடன்பாடு ஏற்பட்டது
அதில் உடன்பாடு ஏற்படவில்லை. கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஐக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தமுறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று சிபிஐ தங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இன்று காலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உடன்பாட்டில் 2 கட்சிகளும் கையெழுத்திட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், "திமுக எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. குறைவான தொகுதி ஒதுக்கப்பட்டதில் தொண்டர்கள் சோர்வடையலாம். ஆனால், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கில் உடன்பாடு ஏற்பட்டுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications