முதலியார் சமூகத்தை புறக்கணிக்கிறதா திமுக.. "அவர்களுக்கு" மட்டும்தான் பதவியா.. கிளம்பும் ஆதங்க குரல்
துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறித்த ஆதங்கம் திமுகவில் வெடித்துள்ளது
சென்னை: ஆ. ராசா மற்றும் பொன்முடிக்கு திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது, கட்சிக்குள் சில தரப்பிடம் ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம்.
குறிப்பாக முதலியார் சமுதாயத்தினர் மத்தியில் ஆதங்கம் அதிகமாகவே இருக்கிறதாம். எத்தனையோ பேர் கட்சிக்காக உயிரை தந்து வேலை பார்த்துட்டு இருக்கும்போது, இப்படி முதலியார் சமுதாயத்தையே புறக்கணித்தால் எப்படி" என்ற ஆதங்க கேள்விகள் எழுந்து வருகின்றன.
திமுகவில் துணை பொதுச்செயலாளர்களாக மூத்த தலைவர்கள் பொன்முடியும், ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.. இதற்கு தான் கூடுதலாக எதிர்ப்பு கட்சிக்குள்ளேயே வெடித்து கிளம்பி உள்ளது.
அதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஷ் பேக்
1977ல் 48 சீட்டுக்களுடன் பலம் பெற்றிருந்தது திமுக.. இதில் சென்னையும், தஞ்சை மாவட்டமும்தான் திமுகவை உயர்த்தி உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்தது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் அவ்வளவாக திமுக சோபிக்கவில்லை.. ஆனால் அரியலூரில் மட்டுமே வெற்றி பெற்றது.. இதற்கு காரணம் ஆறுமுகம்.. அவர் பெயரே அரியலூர் ஆறுமுகம் என்பார்கள்.. இவர் உடையார் சமுதாயத்தை சேர்ந்தவர். நல்ல மதிப்பை தொகுதியில் பெற்றிருந்ததால் அசால்ட்டாக வெற்றி பெற்றார்.

திருச்சி
1989-லும் மறுபடியும் இவரேதான் வெற்றி பெற்றார்.. ஆனால் வெற்றி பெற்றும் இவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. இதற்கு காரணம் அப்போதைய மாவட்ட செயலாளராக அன்பில் தர்மலிங்கம்தான். ஆறுமுகத்துக்கு பதிலாக, அதே சமுதாயத்தை சேர்ந்த பொன்முடி பொருத்தமானவர்தான் என்று சொல்லி, மந்திரி பொறுப்பையும் பெற்று தந்தார். அப்போது தெய்வசிகாமணி என்கிற பொன்முடி விழுப்புரம் எம்எல்ஏவாக இருந்தார்.

வன்னியர்கள்
ஆனால், பொன்முடியோ அரசியலில் வன்னியருக்கு எதிரான காய்களை நகர்த்தி கொண்டே வந்தார்.. அச்சமுதாயத்தை சேர்ந்த எத்தனையோ வன்னிய பெருந்தலைவர்கள், கட்சியை விட்டு செல்ல காரணமாக இருந்ததே பொன்முடிதான் என்று பகிரங்கமாகவும் சொல்லப்பட்டது.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், திமுகவை ஆதரித்த வன்னியர்கள் பொன்முடியால் எதிர்த்தனர்.. புதிதாக வந்தவருக்கு மந்திரி பதவியா? என்ற முணுமுணுப்புகளும் அப்போது எழுந்தன. இப்படித்தான் விழுப்புரத்தில் பொன்முடி திகழ்ந்து வருகிறார்.

எம்எல்ஏ
இப்போது விஷயம் என்னவென்றால், எத்தனையோ முறை அமைச்சராக பொறுப்பை வகித்த பொன்முடி, இப்போது, எம்எல்ஏவாக இருக்கிறார்.. மாவட்ட செயலாளரும்கூட.. பொன்முடியின் மகன் எம்பியாக இருக்கிறார்.. இவ்வளவும் போதாதென்று, இப்போது எதற்கு இவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி தர வேண்டும் என்ற சலசலப்பு முதலியார் சமுதாயத்தில் எழுந்துள்ளது.

திமுக
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட திமுகவினர் சிலரிடம் நாம் பேசினோம்.. "திமுக என்றாலே முதலியார் கட்சி என்று தான் பெயர்.. பேராசிரியர் அன்பழகன் உயிருடன் இருக்கும்வரை உரிய முக்கியத்துவம் முதலியார் சமுதாயத்துக்கு தரப்பட்டு வந்தது.. ஆனால் தற்போது அப்படி இல்லை.. ஒவ்வொரு முறையும் தேர்தலில் முதலியார்கள்தான் திமுகவுக்கு ஓட்டு போட்டு வருகிறார்கள்.. இத்தனை பதவிகளை பொன்முடி குடும்பம் வைத்து கொண்டுள்ள நிலையில், முதலியார் சமுதாயத்தை சேர்ந்த வேறு யாருக்காவது அந்த துணைபொதுச்செயலாளர் பதவி தந்திருக்கலாமே?

தியாகராஜன்
பிடிஆர் பழனிவேல்ராஜன் மகன் பிடிஆர் தியாகராஜனுக்கு தந்திருக்கலாம்.. ஏன்னா, அவர் பரம்பரை திமுககாரர்.. இப்படி பொன்முடிக்கு பதவியை தந்துள்ளதால், முதலியார் சமுதாய மக்களுக்கு இது சம்மட்டி அடிவிழுந்து விட்டது.. கடந்த தேர்தலில் விழுப்புரத்தில் நின்று ஜெயிக்க முடியாத பொன்முடி, வரும் தேர்தலில் மட்டும் எப்படி அனைத்து சமுதாய வாக்குகளை வாங்குவார்? ஏற்கனவே இவர் மீது பட்டியலின மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.. வன்னியர்களை பகைத்து கொண்டார், இன்னொரு பக்கம் முதலியார்களையும் பகைத்து கொண்டு, எப்போதுமே குறுநில மன்னராகவே தன்னை காட்டி கொள்வார். இந்த பதவி தந்ததால் மட்டும் என்ன ஓட்டு வங்கியை இவர் திமுகவுக்கு பெற்றுத்தர போகிறார்?

அந்தியூர் செல்வராஜ்
ஆ.ராசாவுக்கு எதுக்காக இப்போது பதவி? அவர் மத்திய அமைச்சராக இருந்தவர்.. பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இருக்கிறார்.. நீலகிரி எம்பியாக உள்ளார்.. பட்டியலினத்தவருக்குதான் ஏற்கனவே அந்தியூர் செல்வராஜுக்கு பொறுப்பு தரப்பட்டுவிட்டதே? அவருக்கு ரெக்கமண்ட் செய்ததே ஆ.ராசாதானே? இப்போது இன்னொரு முறை எதற்காக ராசாவுக்கு பதவி தர வேண்டும்? இன்னமும் இவர் மீது 2ஜி வழக்கு அதிருப்தி இருக்கு.

ஏவ வேலு
இதில் ஏவ வேலுவின் பெயரும் பலமாக அடிபடுகிறது. அவர் பொருளாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை எதிர்பார்த்து தீவிரமாக காய் நகர்த்தி வந்தார். ஆனால் கடைசி வரை அது எதுவுமே கிடைக்கவில்லை. துணை பொதுச்செயலாளர் பதவிக்கு முயன்றார் .. கிடைக்கவில்லை... இவர் அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால், அவர் மீதான பார்வை இன்னமும் இவர் மீது அகலவே இல்லை.

ராமலிங்கம்
இந்த நிலையில்தான் அவர்தான் ராசாவுக்கும், பொன்முடிக்கும் பதவியை தரலாம் என்று தீவிரமாக வலியுறுத்தி அதைக் கிடைக்க செய்தார் என்று ஒரு முணுமுணுப்பும் நிலவுகிறது. ஆனால், ராசாவுக்கு பதிலாக காட்டுமன்னார்குடி ராமலிங்கத்துக்கு தந்திருக்கலாமே? அவர் நீண்ட கால கட்சிக்காரர்.. கட்சியின் சீனியர் லீடர்.... அதேபோல, நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு பதவி தருவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது.. இதற்கு டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா பெயரும் அடிபட்டது.. அதுபோல, கொங்கு சமுதாயத்தை சேர்ந்த வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு பதவி தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

பொன்முடி
ஆனால் பலரும் எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏமாற்றத்தில் மூழ்கியிருப்பதால் கட்சியில் பல்வேறு தரப்பிலும் அதிருப்தி கிளம்பியுள்ளதாம். இருப்பினும் ராசா மீது பெரிய அளவில் யாருக்கும் அதிருப்தி இல்லை. பொன்முடிதான் ரொம்ப இடிப்பதாக பலரும் வெளிப்படையாகவே கடுப்பைக் காட்டிக் கொண்டிருக்கின்றனராம்.












Click it and Unblock the Notifications