விருதுநகர் காரியாபட்டியில் இன்று மாலை திமுக இளைஞரணி மாநாடு! முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது?
சென்னை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அமைந்துள்ள கல்குறிச்சியில், கலைஞர் திடலில் இன்று (சனிக்கிழமை) மாலை தி.மு.க. தென்மண்டல இளைஞரணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான தங்கம் தென்னரசு, "திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரையிலான 10 வருவாய் மாவட்டங்கள், தி.மு.க. அமைப்பு ரீதியாக 20 மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. பாதுகாப்பு, வாகன நிறுத்தும் வசதி, உணவு, குடிநீர், கழிவறைகள், ஒலி-ஒளி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு ஏற்பாட்டுப் பணிகளில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்," என்றார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இம்மாநாட்டில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும் குறிப்பிட்டார்.
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மண்டல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்காக 300 ஏக்கர் பரப்பளவில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பங்கேற்பாளர்கள் சிரமமின்றி வருகை தரும் வகையில் 15 நுழைவாயில்கள், 170 ஏக்கர் பரப்பளவில் விரிவான பார்க்கிங் வசதி, ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 27 வாட்டர் டேங்க்கள் மூலம் குடிநீர் வசதி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய 150 தற்காலிக கழிப்பறைகள், 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 10 மருத்துவ முகாம்கள், 6 தீயணைப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை நேற்றைய தினம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications