சீனில் அந்த நபர் இல்லை.. அவர் இருந்திருந்தால் இப்போ.. காங்கிரஸ் திமுக பிரச்சனையே இருந்திருக்காது!
சென்னை: காங்கிரஸ் - திமுக இடையே கூட்டணி விவகாரத்தில் பெரிய அளவில் பிரச்சனை நிலவி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுத்தால் பிரச்சனை சரியாகிவிடும் என்று பலரும் நினைத்தனர்.. ஆனால் அவரின் பேச்சுக்கு கூட காங்கிரஸ் கட்சியினர் பதில் பேச்சு பேசும் அளவிற்கு மோதல் உச்சம் அடைந்துவிட்டது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியலில் நீண்டகால கூட்டணிகளாக விளங்கும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. திமுகவிடம் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் பங்கு: காங்கிரஸின் பிடிவாதம்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) முக்கிய நிர்வாகிகள், வரும் தேர்தலில் தங்களுக்குக் குறைந்தபட்சம் 40 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த கோரிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில், "வெறும் வாக்கு வங்கியாக மட்டும் செயல்பட நாங்கள் விரும்பவில்லை; அதிகார மையத்திலும் எங்களது பங்களிப்பு இருக்க வேண்டும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.
"ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு நாங்கள் உழைக்கிறோம், ஆனால் ஆட்சியில் எங்களுக்கு இடமில்லை. இது தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது," என்று கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பிரவீன் சக்ரவத்தி - மாணிக்கம் தாக்கூர்
இந்த விவகாரத்தில் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுகவிற்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டும் உழைக்கும் அமைப்பு அல்ல என்று குறிப்பிட்ட மாணிக்கம் தாக்கூர், "நாங்கள் ஒன்றும் என்.ஜி.ஓ (NGO) கிடையாது; ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். 58 ஆண்டுகளாகத் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலையில், அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குப் பெரும்பான்மை கிடைக்காதபோதும், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் சேராதது ஒரு "வரலாற்றுத் தவறு" என்று மாணிக்கம் தாகூர் விமர்சித்தார். அந்தத் தவறை 2026-ல் மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.இப்படி தொடர்ந்து மாணிக்கம் தாகூர் தொடர்ந்து திமுகவிற்கு எதிராக நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிட்டு வருகிறார்.
சீனில் இல்லாத டிஆர் பாலு
இந்த விவகாரத்தில் கனிமொழி கூட்டணி பற்றி பேச டெல்லி அனுப்பப்பட்ட போது ... பிரச்சனை சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் ராகுலை சந்தித்து பேசினார். ஆனால் பிரச்சனை சரியாகவில்லை.
செல்வப்பெருந்தகை - ராகுல் பேசிய பின் பிரச்சனை சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.
ஸ்டாலின் பொதுவில் பேசிய பின் பிரச்சனை அடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் நிலைமை மோசமானது.
பொதுவாக திமுக - காங்கிரஸ் கூட்டணி விவகாரங்களை திமுக மூத்த தலைவர் எம்பி டிஆர் பாலுதான் நிர்வகிப்பார். ஆனால் "சில" காரணங்களுக்காக அவர் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை.
இதுதான் சிக்கலாகி உள்ளது. ஒருவேளை டிஆர் பாலு முன்பே ராகுலை பார்த்திருந்தால், கிரிஷ் ஜோடங்கரை பார்த்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது. ஆனால் டிஆர் பாலு இப்போது ஆப் லைனில் இருக்கிறார். பெரிதாக இந்த விவகாரங்களில் தலையிடவில்லை.
இதுதான் ஒருவேளை திமுக - காங்கிரஸ் மோதல் தீவிரம் அடைய காரணமோ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications