உயிரே போனாலும் விவசாயத்தை விடாதீங்கனு பேசுனீங்க.. காவிரியை தாரை வார்க்க போகிறீர்களா? டிஆர்பி ராஜா!
சென்னை: உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்கனு திரையில் விஜய் பேசிய வசனத்தை கூட தரையில் பேச முடியாத கோழையாக இருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணியை காப்பாற்ற காவிரியை தாரை வார்க்கப் போகிறீர்களா என்றும் டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகா வந்திருந்தார். அவர் முன் பேசிய கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், பிரதமர் மோடி இப்போதுதான் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணையை கண்டார். மேகதாது திட்டத்தை கர்நாடகாவில் செயல்படுத்த வேண்டும். அதனை யாராலும் தடுக்க முடியாது. உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு தெளிவான தீர்ப்பௌ வழங்கியுள்ளது.

டிகே சிவக்குமார் பேசியது என்ன?
சட்டரீதியாக நீங்கள் எங்களுக்கு அனுமதி வழங்கி உதவி வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி முன்னிலையில் டிகே சிவக்குமார் இப்படி பேசி இருப்பது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.
டிஆர்பி ராஜா ட்வீட்
இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டத் தொடர்ந்து முயற்சித்து வரும் கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமார் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டுமே சொந்தமான நதியா!
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் திருத்தி உறுதி செய்ததன்படி, பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீர் கிடைப்பது சட்டப்பூர்வமான உரிமை. மேகதாது அணையைக் கட்ட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் எந்த நிபந்தனையற்ற அனுமதியையும் வழங்கவில்லை என்பதே உண்மை. காவிரி நீரின் மீது தமிழ்நாட்டின் சட்டரீதியான உரிமைகள் பலமாக உள்ளன.
குறித்த காலத்தில் காவிரி நீர் கிடைக்காவிட்டால், காவிரி டெல்டாவின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும்.
பயிர்க்காலம் முடிந்த பிறகு வரும் தண்ணீரால் விவசாயிக்கு என்ன பயன்? தமிழ்நாட்டில் தவெக அரசின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் இந்த அணைத் திட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்கிறது!
திரையில் விஜய் பேசிய வசனம்
மேகதாது அணை கட்ட நாங்கள் அனுமதி கேட்க தேவை இல்லை என்று டிகே சிவக்குமார் கொக்கரிக்கிறார். காங்கிரஸ் தயவில் தானே தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது என்ற துணிச்சல் தான் இப்படி பேச வைக்கிறது. உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்கனு திரையில் விஜய் பேசிய வசனத்தை கூட தரையில் பேச முடியாத கோழையாக இருக்கிறார்.
ஆனால், தமிழ்நாட்டின் நீருரிமைக்கே அச்சுறுத்தலாக இருக்கும் இந்த விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸின் வாய்ச்சவடால் தலைவர்கள் தமிழ்நாட்டு விவசாயிகளின் பக்கம் நிற்பார்களா? கர்நாடகாவின் பக்கம் நிற்பார்களா? ராகுல் காந்தி தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையைப் பாதிக்கக்கூடிய இந்தத் திட்டத்தை எதிர்ப்பீர்களா இல்லையா !
கூட்டணியா? காவிரியா?
CM Sir, உங்கள் அரசியல் கூட்டணியைக் காப்பாற்றுவது முக்கியமா? தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவது முக்கியமா? கூட்டணியா? காவிரியா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த பிரச்சினை குறித்து தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரினார். இது சட்டமன்ற தீர்மானத்தில் திருத்தமாகவும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், டெல்டா விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை தவெக அரசு எப்போது செய்யப்போகிறது! மாண்புமிகு பிரதமர் மோடி தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனையும், எங்களது சட்டப்பூர்வமான காவிரி நீருரிமையையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது! என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
