கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக
சென்னை: திருச்சியில் முதலமைச்சர் விஜய் இன்று பேசியதை கிண்டல் செய்து திமுக மீம் வெளியிட்டு உள்ளது. இன்னமும் தேர்தல் பிரச்சார மூடிலேயே விஜய் இருப்பதாக திமுகவினர் கிண்டல் செய்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் திருச்சி கிழக்கு பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விஜய் இன்று அங்கு சென்றார்.

திருச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், இந்த தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும், அதான் திமுகவும் மற்றும் பலரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, திருட்டுத்தனமாக யாருக்கும் தெரியாமல் ஒரு ஓரமாக உட்கார்ந்து பேரம் பேசி, கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். தவெக ஆட்சி அமைந்தால் அவர்களால் கொள்ளையடிக்க முடியாது. லஞ்சம் ஊழல் எல்லாம் இருக்காது. அதனால் தான் கூட்டணி அமைக்க முயன்றுள்ளனர்.
திருச்சி கிழக்கு மக்களுக்கு ஸ்பெஷல் நன்றி. திருச்சி தமிழகத்தின் இதயம் இந்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களும் என் இதயத்திற்கு நெருக்கமானவர்கள். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் 6 நாட்கள் கூட சும்மா இருக்கவில்லை. நான் பதவியேற்ற நாளில் இருந்து அரை மணி நேரம் கூட சும்மா இல்லாமல் புலம்புகிறார்கள். அதுவும் கல்யாண வீட்டுக்கெல்லாம் போய் புலம்புறாங்க!
திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதியில் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துவிட்டீர்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த தேர்தலில் 1977 இல் எம்ஜிஆர் பெற்ற வாக்கு சதவீதங்களை விட அதிகமாக நாம் பெற்றதாக சிலர் சொல்கிறார்கள். எம்ஜிஆரோடு என்னை நான் ஒப்பிடவில்லை. எம்ஜிஆர் எம்ஜிஆர்தான், ஆனால் நாம் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் உழைக்கிறோம்.
தவெக, திமுக இடையே தான் போட்டி. மக்கள் சட்டசபையில் என்ன நடக்கிறது என்று கவனிக்கிறார்கள். ரீல்ஸ் போட்டவர்கள் எல்லாம் நியூஸ் பார்க்கிறார்கள். இந்த விழிப்புணர்வு யாரால் நடந்தது என நான் சொல்ல வேண்டியதில்லை.
இப்போதும் தற்குறி என்று கூறுகிறார்கள். அவர்கள்தான் திமுகவின் அரசியலை கேள்விகுறியாக்கியுள்ளனர். இன்னும் கேள்வி குறியாக்குவார்கள். மக்கள் அரசியல் புரிதல் இல்லாமல் வாக்களிக்கிறார்களாம். அவர்களுக்கு வாக்களித்தால் நல்லவர்களாம், நமக்கு வாக்களித்தால் கெட்டவர்களாம்.

திமுக இப்போது வெறுமன தீய சக்தி மட்டுமில்லை. மக்களிடம் இருந்து ரொம்ப தூரம் போன தூரச் சக்தி, ஓர சக்தி, கோரச் சக்தி.. நீங்கள் எப்போது தீர்ந்து போன சக்தி உடன் ஆட்சி அமைக்க நினைத்தீர்களோ.. அப்போதே தூர்ந்துபோன சக்தியாகவும் மாறிவிட்டது. நீங்கள் எல்லாம் நம்மை பற்றி அவதூறு பேசலாமா அது நியாயமா.. இவ்வளவு பெரிய மக்கள் சக்தி இருக்கும்போது நமக்கு ஏன் பேர அரசியல்.
தேர்தல் அரசியலில் இவ்வளவு காலம் இருந்த சாதி, மதம், பணம் கொடுத்து வாக்குகள் வாங்குவதை உடைத்துள்ளோம். நாம் எது செய்தாலும் அரசியலமைப்பின்படியே செய்வோம். நமக்கு குதிரை பேரம் எல்லாம் தேவையில்லை, என்று விஜய் பேசி இருந்தார்.
இந்த நிலையில், திருச்சியில் முதலமைச்சர் விஜய் இன்று பேசியதை கிண்டல் செய்து திமுக மீம் வெளியிட்டு உள்ளது. கோட்டைச்சாமி... எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? என்று கூறி இன்னமும் தேர்தல் பிரச்சார மூடிலேயே விஜய் இருப்பதாக திமுகவினர் கிண்டல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications