முகமெல்லாம் வெற்றி பூரிப்பு... அப்பாவுக்கு மகன் மகளோடு போய் உதயநிதி கொடுத்த "அந்த பரிசு" செம
சட்டசபைத் தேர்தலில் அதிரடி வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் செங்கலை பரிசாக கொடுத்துள்ளார் உதயநிதி.
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பதாக அறிவிப்பு வெளியான உடன் கட்சியின் தலைவரும், அப்பாவுமான ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் செங்கலை பரிசாக கொடுத்துள்ளார் உதயநிதி. தேர்தல் பிரசாரத்திற்கு போகும் இடங்களில் எல்லாம் செங்கலோடு போய் இதுதான் எய்ம்ஸ் என்று கூறி ஒட்டு கேட்டு கலகலப்பை ஏற்படுத்தியவர் உதயநிதி. இதற்காக அவர் மீது செங்கலை திருடிவிட்டார் என்றெல்லாம் பாஜகவினர் புகார் அளித்திருக்கின்றனர்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 150 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. 10 ஆண்டுகாலமாக எதிர்கட்சியாகவே இருக்கும் திமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து அரியணை ஏற வேண்டும் என்ற முனைப்போடு 200 தொகுதிகளில் வெற்றி இலக்குடன் இந்த சட்டசபைத் தேர்தலில் களமிறங்கியது.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவரான மு.க ஸ்டாலின், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தேர்தல் வெற்றிக்காக திட்டமிட ஆரம்பித்து விட்டார். உதயநிதி ஸ்டாலின் ஒருபக்கம், கனிமொழி மறுபக்கம் என களமிறங்க திமுக தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று கிராம சபைக் கூட்டங்களை நடத்தினார்.

தேர்தல் பிரசாரம்
ஆளும் அதிமுகவிற்கு எதிராக திமுகவின் வியூகம் பலமுனைத் தாக்குதலாக இருந்தது. பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடவே, திமுகவின் பிரசார பாணியே மாறியது. இருளில் இருக்கும் தமிழகத்திற்கு ஸ்டாலின் வந்து விடியலைத் தருவார் என்று பாடல்கள் மூலம் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.

திமுக இளைஞரணி
திமுக இளைஞரணி செயலாளர் பதவி கடந்த 2019ஆம் ஆண்டு உதயநிதிக்கு கொடுக்கப்பட்டது. கட்சியில் யாருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது தொடங்கி வேட்பாளர் தேர்வு வரைக்கும் உதயநிதியின் பங்களிப்பு இருந்தது. தேர்தல் பிரசாரத்தில் உதயநிதியின் பங்கு முக்கியமானதாக இருந்தது.

எய்ம்ஸ் செங்கல்
உதயநிதி போட்டியிட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்பட்டாலும் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். போகும் இடங்களில் எல்லாம் கையில் ஒரு செங்கலை எடுத்துக்கொண்டார். மதுரையில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் அதைத்தான் நான் கையோடு கொண்டு வந்து விட்டேன் என்று சொல்லி வாக்கு சேகரித்தார்.

அடிக்கல் நாட்டியதோடு அவ்வளவுதான்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மோடி அடிக்கல் நாட்டியதோடு அவ்வளவுதான் எந்த வேலையும் நடக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லி வாக்கு சேகரித்தார். மத்திய அரசினால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என்று சொன்னார். உதயநிதியின் பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தலைவருக்கு எய்ம்ஸ் செங்கல் பரிசு
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக 150 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருப்பதாக அறிவிப்பு வெளியாகவே வெற்றிக்கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன. பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாட தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளதால் திமுக தலைவரும் அப்பாவுமான மு.க ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் செங்கலை பரிசாக கொடுத்துள்ளார் உதயநிதி.

ட்விட்டரில் பதிவு
உதயநிதி ஸ்டாலின் தனது பேரன் பேத்திகளுடன் புடைசூழ அமர்ந்திருக்க தனது மகன், மகளுடன் வீட்டு குட்டீஸ்களுடன் எய்ம்ஸ் செங்கலை பரிசளித்த போட்டவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உதயநிதி. திமுக ஆட்சியில் எய்ம்ஸ் கட்டி முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் மு.க ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications