மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் என்ட்ரியால் திமுக, அதிமுக கூட்டணிகள் கலங்கி போய் உள்ளன. இந்நிலையில் தான் விஜய் எவ்வளவு ஓட்டுகள் பெற்றால் திமுகவுக்கு சாதகமாக இருக்கும்? எவ்வளவு ஓட்டுகள் பெற்றால் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும்? என்பது பற்றி 'என்டிவி' செய்தி நிறுவனம் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளது.
2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 45.8 சதவீத ஓட்டுகளை பெற்றது. அதிமுக கூட்டணி 39.7 சதவீத ஓட்டுகளை பெற்றது. மற்றவர்கள் 14.5 சதவீத ஓட்டுகளை பெற்றனர். திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையேயான ஓட்டு சதவீதம் 6 சதவீதமாக இருந்தது.

இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் சீமான், விஜய்யின் தவெக இடையே போட்டி நிலவி வருகிறது. திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. அதிமுக இழந்த ஆட்சியை கைப்பற்ற துடித்து வருகிறது. இவர்கள் 2 பேருக்கும் பெரிய தலைவலியாக விஜய்யின் தவெக உள்ளது.
விஜய்யின் தவெக முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. இதனால் அவர் யாருடைய ஓட்டை பிரிப்பார்? எவ்வளவு ஓட்டு பெறுவார்? அது தேர்தலில் யாருக்கும் சாதகம் பாதகமா மாறுகிறதோ? என்று பல கேள்விகள் உள்ளன. இந்நிலையில் தான் என்டிடிவி செய்தி நிறுவனம் விஜய்யின் தவெக பெறும் ஓட்டை மையப்படுத்தி 'சி வோட்டர்' கணிப்பு நிபுணர்களுடன் சேர்ந்து சில முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளது.
என்டி டிவி கணக்கு
சிவோட்டர் சர்வேயின் படி பார்த்தால் இந்த முறை தமிழக சட்டசை தேர்தலில் திமுக 41 சதவீதம், அதிமுக 38 சதவீதம், தவெக 14 சதவீதம் வரை பெறலாம். மற்றவர்கள் 7 சதவீதம் வரை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விஜய் அதிகபட்சமாக 14 சதவீதம் வரையும், குறைந்தபட்சமாக 8 சதவீதம் வரையும் வாக்கு பெறலாம் என்பதை என்டிடிவி கணக்கில் எடுத்து கொள்கிறது.
அதோடு இந்த ஓட்டு சதவீதத்தை கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தவெக 8 சதவீதம் பெற்றால் என்ன நடக்கும்?
மேலும் தமிழக வெற்றிக் கழகம் 8 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பெற்றால் அது திமுக, அதிமுகவை எப்படி பாதிக்கும்? என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தவெக 8 சதவீத வாக்குகள் பெறும் பட்சத்தில் 2 சதவீத வாக்குகள் திமுகவிடமிருந்தும், 4 சதவீத வாக்குகள் அதிமுகவிடமிருந்தும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு செல்லலாம். இது நடக்கும் பட்சத்தில் திமுகவை விட அதிகமுகவுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படும். அதன்படி திமுக கூட்டணி 173 இடங்கள் வரை வெற்றி பெறலாம். அதே சமயம், அதிமுக கூட்டணி வெறும் 61 இடங்களை மட்டுமே வெல்லும்.
அதேவேளையில் தவெக 8 சதவீத ஓட்டுகள் பெறும் போது திமுகவிடம் இருந்து 4 சதவீத ஓட்டுகளையும், அதிமுகவிடம் இருந்து 2 சதவீத ஓட்டுகளையும் பெறுவதாக வைத்து கொண்டாலும் அது திமுக கூட்டணிக்கு தான் சாதகம். இந்த சமயத்தில் திமுக கூட்டணி 142 தொகுதிகளிலும், அதிமுக 92 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதனால் தவெக 8 சதவீத வாக்குகளை பெற்றால் திமுகவுக்கு சாதகமாக மாறி ஆட்சியை தக்க வைக்க உதவும்.
10 சதவீத வாக்குகளை பெற்றால்..
அதேவேளையில் விஜய்யின் தவெக 10 சதவீத வாக்குகள் பெறுவதாக வைத்து கொள்வோம். இதில் அதிமுகவிடம் இருந்து 5.6 சதவீதமும், திமுகவிடம் இருந்து 2.4 சதவீதம் ஒட்டுகளும், மற்றவர்களிடம் இருந்து 2 சதவீதம் செல்லும் பட்சத்தில் திமுக 176 தொகுதிகளில் வெற்றி பெறலாம். அதிமுக 56 தொகுதிகளில் சுருங்கலாம். அதேவேளையில் தவெகவின் 10 சதவீத ஓட்டில் திமுகவிடம் இருந்து 5.6 சதவீதம் வந்தாலும் அதிமுகவிடம் இருந்து 2.4 சதவீதம் வந்தால் திமுக கூட்டணி 130 தொகுதிகளில் வெற்றி பெறும். அதிமுக கூட்டணி 104 தொகுதிகளில் வெற்றி பெறும்
12 சதவீத வாக்கு பெற்றால்..
அதேசமயம் தவெகவின் 10 சதவீதம் வாக்கு 12 சதவீதமாக உயரும்பட்சத்தில் 8 சதவீதம் திமுகவிடமிருந்தும், 2 சதவீதம் அதிமுகவிடமிருந்தும் கிடைத்தால் அது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுக 127 தொகுதிகளிலும், திமுக 107 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
14 சதவீதத்தை பெற்றால்..
அதேவேளையில் விஜய்யின் தவெக 14 சதவீத ஓட்டுகள் பெறும் பட்சத்தில் அதில் 8.4 சதவீதம் அதிமுகவிடமிருந்து வந்தால், அது ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஒரு பெரும் வெற்றியை உறுதி செய்யும். இந்தச் சூழலில், அதிமுக 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும். அதேவேளையில் தலைகீழாக, 14 சதவீத வாக்குகளில் 8.4 சதவீதம் திமுகவிடமிருந்து வந்தால் திமுக 119 தொகுதிகளிலும், அதிமுக 115 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு 1 சாதகம் - திமுகவுக்கு 3 சாதகம்
இதன்மூலம் தவெக 12 சதவீதம் பெற்று அதில் 8 சதவீதம் திமுகவிடமிருந்தும், 2 சதவீதம் அதிமுகவிடமிருந்தும் கிடைத்தால் அது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுக கூட்டணி 127 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 107 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த ஒரு கணக்கீடு மட்டும் தான் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. மற்றபடி விஜய்யின் தவெகவின் 8 சதவீதம், 10 சதவீதம், 14 சதவீதம் உள்ளிட்டவை திமுகவிற்கு தான் சாதகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications