களம் கடுகடுன்னு தகிக்குதே.. நேருக்கு நேர் மல்லுக்கட்டும் திமுக vs அதிமுக vs பாஜக.. லிஸ்ட்டை பாருங்க!
சென்னை: லோக்சபா தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் உதயசூரியன் vs இரட்டை இலை vs தாமரை இடையே 9 தொகுதிகளில் நேரடியாக மும்முனை போட்டி நிலவுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கூட்டணிகள் மும்முனை போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.

களம் ரெடி, கட்சிகள் ரெடி: கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி, அமமுக ஆகியவை மட்டும் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. திமுக - அதிமுக - பாஜக கூட்டணிகள் பிரதானமாக களத்தில் இருக்கும் நிலையில், திமுக - அதிமுக - பாஜக ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றனர்.
அந்த வகையில் கோவை, தென் சென்னை, நீலகிரி, வட சென்னை, பொள்ளாச்சி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் அதிமுக, திமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் மும்முனைப் போட்டியில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக , திமுக மற்றும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இதோ:
நேருக்கு நேர் களம் காணும் திமுக - அதிமுக - பாஜக: தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்
கோவை
▪️ கணபதி ராஜ்குமார் (திமுக)
▪️ சிங்கை ஜி. ராமச்சந்திரன் (அதிமுக)
▪️ அண்ணாமலை (பாஜக)
தென் சென்னை
▪️ தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக)
▪️ ஜெயவர்தன் (அதிமுக)
▪️ தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக)
நீலகிரி (தனி)
▪️ ஆ.ராசா (திமுக)
▪️ லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அதிமுக)
▪️ எல்.முருகன் (பாஜக)
வட சென்னை
▪️ கலாநிதி வீராசாமி - தி.மு.க
▪️ ராயபுரம் மனோ - அ.தி.மு.க
▪️ பால் கனகராஜ் - பாஜக
பொள்ளாச்சி
▪️ ஈஸ்வரசாமி - திமுக
▪️ கார்த்திகேயன் - அதிமுக
▪️ வசந்தராஜன் - பாஜக
திருவண்ணாமலை
▪️ அண்ணாதுரை - திமுக
▪️ கலிய பெருமாள் - அதிமுக
▪️ அஸ்வத்தாமன் - பாஜக
உதயசூரியன் - இரட்டை இலை - தாமரை: இவை போக நாமக்கல் தொகுதியில் கொமதேக திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிடுகிறது. பெரம்பலூரில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதன் காரணமாக இந்த 3 தொகுதிகளிலும் கூட உதயசூரியன் - இரட்டை இலை - தாமரை போட்டியே நிலவுகிறது.
நாமக்கல்
▪️ மாதேஸ்வரன் (கொமதேக) - உதயசூரியன்
▪️ தமிழ்மணி (அதிமுக)
▪️ கேபி ராமலிங்கம் (பாஜக)
பெரம்பலூர்
▪️ அருண் நேரு (திமுக)
▪️ சந்திரமோகன் (அதிமுக)
▪️ பாரிவேந்தர் (ஐஜேகே) - தாமரை
வேலூர்
▪️ கதிர் ஆனந்த் - திமுக
▪️ பசுபதி - அதிமுக
▪️ ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி) - தாமரை
திமுக - அதிமுக - பாஜக இடையே நேரடியாக மும்முனைப் போட்டி நிலவும் இந்த அனைத்து தொகுதிகளுமே தற்போது திமுக வசம் இருப்பவை. எனினும், பாஜக பலம் பெற்றுள்ளதாக அடையாளம் கண்டு நேரடியாக தங்கள் வேட்பாளர்களை இறக்கியுள்ளது. நேருக்கு நேர் பலப் பரீட்சை நடத்தும் இந்த தொகுதிகளின் முடிவுகள் அரசியல் அரங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதிமுகவா பாஜகவா?: கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தது. இந்நிலையில், அதிமுகவுக்கு தங்கள் பலத்தைக் காட்டும் முனைப்புடன் களமிறங்குகிறது பாஜக. திமுக - அஇஅதிமுக எனும் பங்காளி கட்சிகளை வீழ்த்துவோம் என முஷ்டி முறுக்கி கோதாவில் குதித்து உள்ளது பாஜக.
பாஜக சார்பில் அனைத்து தொகுதிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளதில் இருந்தே அக்கட்சி இந்த தேர்தலை எவ்வளவு சீரியஸாக அணுகுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் திமுக - அதிமுக இடையே தான் போட்டி, பாஜகவுக்கு வேலையே இல்லை எனக் கூறி வரும் அதிமுக, இந்த தொகுதிகளில் பாஜகவை முந்தி, தங்கள் வலுவை நிரூபிக்க ரெடியாகி வருகிறது.
மும்முனை போட்டியில் வெற்றி வாகை சூடப்போவது யார்?: ஏற்கனவே கோவை தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் "ஐ யம் வெயிட்டிங்" என அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார். இதனால், திமுக - அதிமுக - பாஜக நேரடியாக மோதும் இடங்களில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.
இரு பெரிய கட்சிகளும் வாக்குகளைப் பிரிக்கும் நிலையில், திமுக வெற்றி வாய்ப்புக்காக தீவிரமாக போராட வேண்டியிருக்கும். அதுபோக, வெற்றி வித்தியாசமும் பெருமளவில் குறையக்கூடும். தேர்தல் முடிவில் இந்த மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்? வீழப்போவது யார்? பார்க்கலாம்












Click it and Unblock the Notifications