2026 தேர்தலுக்கு பிறகு திமுகவில் பல பிரச்சனைகள் வெடிக்கும்.. அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பரபர!
சென்னை: "திமுக 2026க்குப் பிறகு அழிந்துவிடும். 2026 சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தபிறகு அக்கட்சியில் பல பிரச்சனைகள் வெடிக்கும்" என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டசபை தேர்தல் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக இன்று எதுவும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் முடிவு செய்வார். அதனை முடிவு செய்ய வேண்டிய நேரம் இது அல்ல.
திமுக கூட்டணியில் இருந்து விலகமாட்டோம் என கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன. கடந்த கால வரலாற்றைப் பார்க்கும்போது, பொதுவாகவே உறுதியோடு சொல்பவை எல்லாம் எப்படி மாறி இருக்கின்றன என்பதை பார்த்திருக்கிறோம். அதனால், கூட்டணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் எங்குமே அதிமுகவை விமர்சிக்காத நிலையில், அதிமுக - தவெக கூட்டணி அமையும் என்ற யூகங்கள் எழுந்து வருவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "கடந்த காலங்களில் மக்கள் போற்றும் சிறப்பான ஆட்சியை கொடுத்ததால் அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்யவில்லை. பொதுவாக ஒரு ஆட்சி சரியில்லை, கட்சி சரியில்லை என்றால் தான் விமர்சனம் வரும். ஆனால், 31 ஆண்டுகாலம் சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது கட்சி சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. ஆகவே விமர்சிக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.
புதிதாக கட்சி தொடங்கியவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, "புதிதாக வருபவர்கள் ஏன் அழிக்க வேண்டும். திமுக 2026க்குப் பிறகு அழிந்துவிடும். 2026 சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தபிறகு அக்கட்சியில் பல பிரச்சனைகள் வெடிக்கும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications