6 மாதத்தில் மாறிய திமுக.. பாஜக தேவைப்படுதா? மத்திய அரசு அழுத்தமா? ஆட்சி கவிழ்ந்தாலும் மீண்டும் வராது
சென்னை: ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கருணாநிதியை போல ஸ்டாலினால் கட்சியை முழுமையாக ஒருங்கிணைக்க முடியவில்லை.. அதன் விளைவுகளை இப்போது கட்சிக்குள் காண முடிகிறது என்பது என்னுடைய கருத்து" என்று தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.
Retroluxe என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் மணி, "கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக எதிர்ப்பை மையமாக வைத்தே திமுக பல அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினை ஏற்பட்டால்கூட, பாஜக, ஆர்எஸ்எஸ் அல்லது பிரதமர் மோடிதான் காரணம் என்று திமுகவினர் கூறி வந்தார்கள்.

திமுக - பாஜக
ஆனால், கடந்த 6 மாதங்களில் திமுக பாஜகவுக்கு எதிராக எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறது, எத்தனை முக்கியமான அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது, எத்தனை அரசியல் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
இதற்குக் காரணம் என்ன? மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுகிறதா, மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.. சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக திமுக பாஜக எதிர்ப்பு அரசியலைப் பயன்படுத்துகிறது.
திமுகவின் 32 எம்.பி.க்களின் ஆதரவு
பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் திமுகவின் 32 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு போன்ற மசோதாக்கள் தொடர்பாக இந்த ஆதரவு முக்கியமாக இருக்கலாம். அதனால் மத்திய அரசின் அணுகுமுறையில் அரசியல் கணக்குகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
கடந்த 6 மாதங்களாக திமுகவின் பாஜக எதிர்ப்பு அரசியலில் பெரிய மாற்றம் தெரிகிறது. பாஜக எதிர்ப்பு என்பதே கிட்டத்தட்ட கைவிடப்பட்டுள்ளது.. முன்பிருந்த அளவுக்கு அந்த எதிர்ப்பு இல்லை. அது கொள்கை அடிப்படையிலான அரசியலா அல்லது தேர்தல் வெற்றிக்காக முன்னெடுக்கப்படும் அரசியலா என்பதை பார்க்க வேண்டும். சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காக பாஜக எதிர்ப்பை பயன்படுத்துகிறார்களா என்ற கேள்வியும் இருக்கிறது.
ஆட்சி கவிழ்கிறதா?
இன்னும் 6 மாதங்களில் அரசு கவிழும் என்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.. தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்படிப் பேசலாம். அதே நேரத்தில், அரசியல் ரீதியாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை வெளிப்படுத்தும் விதமாகவும் இது இருக்கலாம். ஆனால், தொண்டர்கள் உண்மையிலேயே இதைக் கேட்டு உற்சாகமடைகிறார்களா என்பதுதான் கேள்வி.
அப்படியே அரசு கவிழ்ந்தாலும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை.. ஒரு வருடம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம்.. அந்த காலகட்டத்தில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். கட்சிகளுக்குள் பிளவுகள் ஏற்பட்டு, அடுத்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலும் உருவாகலாம். எனவே ஆட்சி கவிழ்வது திமுகவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல.
ஜெயலலிதா, கருணாநிதி
ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கருணாநிதியை போல ஸ்டாலினால் கட்சியை முழுமையாக ஒருங்கிணைக்க முடியவில்லை.. அதன் விளைவுகளை இப்போது கட்சிக்குள் காண முடிகிறது என்பது என்னுடைய கருத்து.
திமுகவுக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன.. திமுக பலவீனமடைவது அந்தக் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழக அரசியலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இல்லாதபோதும் திமுக வலுவாக செயல்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது கட்சிக்குள் இருக்கும் உள்முரண்பாடுகள் கூர்மையடையத் தொடங்கியிருக்கின்றன.
வலுவான எதிர்க்கட்சி ஜனநாயகத்துக்கு அவசியம். துரதிர்ஷ்டவசமாக, திமுக தனது வலிமையை இழந்துவருகிறது. இந்த நிலையைப் பற்றிப் பேசவும், கட்சியின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவும் அங்கு போதிய ஆர்வம் இல்லை. அதைக் கவனித்துத் திருத்திக்கொள்ளும் மனநிலையும் நேரமும் கட்சியினருக்கு இல்லை என்று தோன்றுகிறது" என்றெல்லாம் மணி கருத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
