பதவி சுகத்துக்காக மத்திய அரசிடம் பணிந்து செல்லும் அடிமைக் கூட்டம் திமுக அல்ல- ஸ்டாலின் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம் என்று, பதவி சுகத்துக்காக மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு இல்லாத அடிமைக் கூட்டம் அல்ல இது! சுயமரியாதையும் - இனமான உணர்வும் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம்! மத்திய அரசின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடுகிற தி.மு.க.வின் போராட்டக் குணத்தைப் பார்க்க வேண்டிய நிலைமையை உருவாக்கி இருக்கிறார்கள்" என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

திருவள்ளூரில் இன்று நடைபெற்ற மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான 'தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!' கண்டனப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று ஒன்றிய ஆட்சியாளர்களை நோக்கிக் கேட்கின்ற வகையில் திரண்டிருக்கும் தமிழினமே... இந்த இனத்திற்காக - இனிமைமிகு நம்முடைய தமிழ் மொழிக்காக - தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக - ஆபத்து வந்தால், 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்று வீர முழக்கமிட்டு, எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கும் திராவிடப் பட்டாளமே... நம் இனத்தின் - நிலத்தின் - மொழியின் நலத்தைக் கெடுக்கும் எதிரிகள் எவராக இருப்பினும், துணிவுடன் எதிர்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீர உடன்பிறப்புகளே... தி.மு.க. மீது நம்பிக்கை வைத்துத் திரண்டிருக்கும் பொதுமக்களே...

hindi imposition tamilnadu mk stalin

மக்கள் உருவாக்கிய திராவிட மாடல் ஆட்சி

நீங்கள் எண்ணிப் பாருங்கள். மூன்று ஆண்டுகளில் நம்முடைய மாநிலம் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது. அதற்கு முன்பு எவ்வாறு இருந்தது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். முந்தைய ஆட்சியாளர்களால் பத்தாண்டு காலம் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி - வளைந்த முதுகுடன் தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்து ஊர்ந்த அவலம் - இதையெல்லாம் கண்டு பொறுக்காத மானமுள்ள தமிழினம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தால்தான், நாடும் - நாட்டு மக்களும் நிம்மதியாக இருக்க முடியும்... சுயமரியாதை உணர்வுடன் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று முடிவு செய்து, 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நம்முடைய கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தந்து, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கினார்கள்!

திமுக அரசின் திட்டங்கள் எத்தனை தெரியுமா?

மக்களாகிய நீங்கள், எங்கள் மேல் வைத்த நம்பிக்கையை நாளும் காப்பாற்றி - இந்தியாவே திரும்பிப் பார்க்கும் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்! கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - விடியல் பயணம் திட்டம் - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - புதுமைப்பெண் திட்டம் - தமிழ்ப்புதல்வன் திட்டம் - இல்லம் தேடிக் கல்வி - மக்களைத் தேடி மருத்துவம் - நான் முதல்வன் - இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 - இதயம் காப்போம் - பாதம் பாதுகாப்போம் - முதல்வர் மருந்தகம் - தோழி விடுதி -கலைஞர் கனவு இல்லம் - அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் - ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் என்று, குழந்தைகள், பள்ளி - கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், உழவர்கள், பாட்டாளிகள், தொழில் முனைவோர், முதியோர் என்று, அனைத்து தரப்பு மக்களுக்குமான ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து மத்திய அரசு

நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சியை பற்றி உங்கள் முதலமைச்சரான நான் பெருமையாக சொல்வதைவிட, மத்திய அரசே சொல்லியிருக்கிறது. மத்திய அரசு வெளியிடும் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் - புள்ளிவிவரங்களிலும் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாக இருக்கிறது! அதனால்தான், நம்முடைய திட்டங்களை பிற மாநில அரசுகளும் தங்களின் மாநிலங்களுக்கு எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்... தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் மீண்டும் நடைபோடுகிறது...

hindi imposition tamilnadu mk stalin

கொல்லைபுறமாக வலதுசாரி அஜெண்டா திணிப்பு

ஒரு மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றால், அந்த மாநிலத்திற்கு துணை நிற்க வேண்டியது, மத்திய அரசின் கடமை! ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு எப்படிப்பட்ட அரசாக இருக்கிறது? கொல்லைப்புறம் வழியாக தங்களின் வலதுசாரி அஜெண்டாவை செயல்படுத்த துணைநின்ற அ.தி.மு.க. ஆட்சி சென்றுவிட்டதே என்ற கோபத்தோடும்; மீண்டும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடும்; நம்முடைய செயல்திட்டங்களுக்கு தி.மு.க. அரசு தடையாக இருக்கிறதே... தமிழ்நாட்டுக்கும் - தமிழர்களுக்கும் காவல் அரணாக இருக்கிறதே என்ற எரிச்சலோடும்; எப்படியெல்லாம் இடைஞ்சல் தர முடியுமோ - எந்த வகையில் எல்லாம் தடைக்கற்களைப் போட முடியுமோ - எதையெல்லாம் செய்து நம்முடைய நிம்மதியைக் கெடுக்க முடியுமோ - அதையெல்லாம் முன்வந்து செய்கிறார்கள்... நம்மைச் சிறுமைப்படுத்த நினைக்கிறார்கள்...

அடிமை கூட்டம் அல்ல திமுக

நம்முடைய உரிமைகளைப் பறிப்பதையும் - தமிழ்நாடு கொச்சைப்படுத்தப்படுவதையும் நம்மால் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம் என்று, பதவி சுகத்துக்காக மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு இல்லாத அடிமைக் கூட்டம் அல்ல இது! சுயமரியாதையும் - இனமான உணர்வும் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம்! மத்திய அரசின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக போராடுகிற தி.மு.க.வின் போராட்டக் குணத்தைப் பார்க்க வேண்டிய நிலைமையை உருவாக்கி இருக்கிறார்கள்!

உரிமைகளை நிலைநாட்டுவோம்

இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, "தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" என்று கண்டனப் பொதுக்கூட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறோம்! நம்மைப் பொருத்தவரைக்கும், ஆளுங்கட்சியாக இருந்தாலும் - எதிர்க்கட்சியாக இருந்தாலும் - சட்டமன்றம் - நாடாளுமன்றம் - மக்கள் மன்றம் என்று, என்றைக்கும் மக்களுக்கான குரலாக ஒலிப்போம். வாதாடியும் - போராடியும் நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவோம் என்பதற்கான உறுதியேற்றுக் கொள்ளும் கூட்டம்தான், இந்த மாபெரும் பொதுக்கூட்டம்!

குஜராத் முதல்வராக இருந்த போது மோடி பேசியது என்ன?

இன்றைக்கு மாண்புமிகு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்கள், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சமயத்தில் என்ன சொன்னார்? "டெல்லியில் இருந்து இந்தியா முழுமைக்கும் திட்டமிடுவது என்பது அகற்றப்பட்டு, அந்தந்தப் பகுதியில் இருப்பவர் துணையோடு திட்டமிடுவதுதான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கும்" என்று சொன்னார். நான் கேட்கிறேன்... மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, ஒருகாலத்தில் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த மாண்புமிகு மோடி அவர்களே... கடந்த பத்தாண்டு காலத்தில் நீங்கள் கூறியபடி மாநிலங்களிடம் நடந்து கொண்டீர்களா? இல்லையே! அதற்கு மாறாக, உங்களின் செயல்பாடுகளும் - உங்கள் அமைச்சரவையின் அணுகுமுறையும் எவ்வாறு இருக்கிறது? மாநிலங்களை எப்படி அழிப்பது; எப்படி ஒழிப்பது; மாநில உரிமைகளை எப்படி பறிப்பது - சிதைப்பது என்று சர்வாதிகார எண்ணமாகத்தானே இருக்கிறது! "நான் பிரதமரானால் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தருவேன்" என்று சொன்னீர்கள்... அவ்வாறு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து - கூட்டாட்சி ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நீங்கள் செயல்படுத்திய செயல்கள் என்ன? அதுதான் என் கேள்வி!

hindi imposition tamilnadu mk stalin

பிரதமரான பின்னர் மோடி சொன்னதும் இதுதான்

பிரதமராகும்போது, நீங்கள் சொன்னதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புறேன்... "மாநில அரசுகள் டெல்லிக்குக் காவடி தூக்கும் நிலைமையை மாற்றி, அதிகாரப் பகிர்விற்கு வழிகாட்டுவதுதான் என்னுடைய அணுகுமுறையாக இருக்கும். மாநில முதலமைச்சராக நான் அடைந்த பன்னிரண்டு ஆண்டுகால அனுபவத்துடன் தேசியத் தலைமையை ஏற்பதால், மாநிலங்களின் பிரச்சினையும் எனக்குத் தெரியும். ஒன்றிய அரசின் முக்கியத்துவமும் எனக்குப் புரியும்" என்று சொன்னீர்களே... சொன்னபடி நடந்து கொண்டீர்களா?

மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினீர்களா?

வரி விதிப்பதில் மாநிலங்களுக்கு உரிமை உண்டா? வரிப் பகிர்விலாவது மாநிலங்களிடம் நியாயமாக நடந்து கொண்டீர்களா? திட்டங்களை அறிவிப்பது, செயல்படுத்துவது இதிலாவது மாநிலங்களைப் பாரபட்சமில்லாமல் நடத்துகிறீர்களா? இல்லையே... கூட்டாட்சித் தத்துவத்தை ஆதரிப்பவர் நீங்கள் என்று சொல்வதற்கு ஒரு சாட்சியத்தையாவது காட்ட முடியுமா? பிரச்சினை வரும்போது, மாநில முதலமைச்சர்களை அழைத்து என்றைக்காவது பேசியிருக்கிறீர்களா? ஆலோசனை நடத்தியிருக்கிறீர்களா? எதுவும் இல்லையே!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்குவதா?

அதுமட்டுமல்ல, இன்னும் சொன்னீர்கள்! "மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, மாற்றுக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்குற மாநில அரசுகளைப் பழிவாங்க மாட்டேன். எந்த வகையிலும் மாநில அரசுகள் பழிவாங்கப்படாது என்று உறுதி அளிக்கிறேன். என்னதான் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் - ஒன்றிய-மாநில உறவு சீர்குலைய இடம்தர மாட்டேன்" என்று சொன்ன பிரதமர் மோடி அவர்களே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்குவதை மட்டுமே - பழிவாங்கும் அரசியலை மட்டுமே நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்களை என்னால் சொல்ல முடியும். இப்போதுகூட எங்களுடைய தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான, 2,151 கோடி ரூபாய் நிதியை கொடுக்காமல் பழிவாங்கும் அரசியலைத்தானே நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்?

எங்க நிதியை எங்களுக்கு தருவதில் என்ன பிரச்சனை?

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... இன்னும் இருக்கிறது! கடந்த 06.12.2012 அன்று குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கூறியது ஞாபகம் இருக்கிறதா? "குஜராத் மக்கள் 60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள்... ஆனால், திரும்ப வருவது மிகக் குறைவு. குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?" என்று கேட்டீர்களே... அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன்... "தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?" நாங்கள் உழைத்து - வரியாகச் செலுத்திய பணத்தில் எங்களுக்கான நிதியைக் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்கான நிதியை விடுவிக்காமல் மிரட்டுறது நியாயமா? தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள்...

உண்மையிலேயே மக்களுக்கான - மாணவர்களுக்கான திட்டமாக இருந்தால் நாம் ஏன் அதை எதிர்க்கப் போகிறோம்? அனைவரையும் கல்விக்குள்ளே அழைத்து வரும் திட்டமாக இருந்தால் அதை வரவேற்றிருப்போமே? ஆனால், தேசியக் கல்விக் கொள்கை அப்படிப்பட்டதா? கல்வியில் இருந்து மக்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல்திட்டங்களையும் கொண்டதாகத்தான் இந்தக் கல்விக் கொள்கை இருக்கிறது! அதனால்தான் எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது! தேசியக் கல்விக் கொள்கையை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்று அதை வரைவு கொள்கையாக வெளியிட்டபோதே, கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, தெளிவான ஆய்வறிக்கையை வெளியிட்டோம்! தேசியக் கல்விக் கொள்கை என்பது, கல்விக் கொள்கை அல்ல; அது காவிக் கொள்கை! அது இந்தியாவை வளர்க்க உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை அல்ல; இந்தியை வளர்க்கக் கொண்டு வரப்பட்ட காவிக் கொள்கை! இந்தக் கல்விக் கொள்கை, தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மொத்தமாக அழித்து - ஒழித்துவிடும் என்றுதான் நாம் எதிர்க்கிறோம்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+