பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம்.. பொதுஇடங்களில் செல்போனுக்கு சார்ஜ் போடுறீங்களா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
சென்னை: ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் யூஎஸ்பி கேபிள் மூலமாக சார்ஜிங் போடும் போது ஹேக்கர்கள் செல்போனை ஹேக் செய்து அதில் உள்ள டேட்டாக்களை திருட வாய்ப்பு இருக்கிறது.
மனிதர்களின் கையில் 6 வது விரலை போன்று தற்போது செல்போன் அத்தியாவசியமாகிவிட்டது. எப்போதும் குனிந்த தலை நிமிராமல் செல்போனையே பார்த்துக்கொண்டு பொது இடங்களில் இருக்கும் நபர்களை அடிக்கடி பார்ப்போம். உள்ளங்கைக்குள் உலகம் என்பதை கிட்டத்தட்ட செல்போன்கள் நிரூபித்து காட்டிவிட்டது என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு செல்போனில் பல்வேறு வசதிகள் பெருகிவிட்டன. இதனால், செல்போன் பயன்பாடு என்பது அத்தியாவசியம் ஆகிவிட்ட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இன்றி சிறந்த பொழுதுபோக்கு கருவியாகவும் செல்போன்கள் மாறிவிட்டன. இதனால், மக்கள் வெளியே எங்கே சென்றாலும் தங்கள் நேரத்தை பெரும்பாலும் செல்போனிலேயே கழித்து விடுகிறார்கள்.
பயணங்களின் போது எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பதால் அடிக்கடி செல்போனில் சார்ஜ் இறங்கிவிடுகிறது. இதனால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் யூஎஸ்பி கேபிள் மூலமாக சார்ஜிங் போடும் வசதி உள்ளது. இதை பயன்படுத்தி மக்கள் தங்கள் செல்போனுக்கு சார்ஜ் போடுவதை காண முடியும்.
தகவல் தொழில் நுட்பம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டாலும், தகவல் தொழில் நுட்பத்தில் உள்ள சின்னஞ்சிறு குறைபாடுகளை பயன்படுத்தி, ஹேக்கிங் செய்து தரவுகளை திருடும் ஹேக்கர்கள் குழுவும் படு ஆக்டிவாக இருக்கிறார்கள். எனவே செல்போனை பயன்படுத்துவர்கள் கொஞ்சம் அசந்தாலும் அவர்களும் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் தான் தற்போது பொது இடங்களில் சார்ஜ் போடும் போது, யுஎஸ்பி போர்ட் மூலமாக சைபர் கிரைம் மோசடி கும்பல், பயனர்களின் தகவல்களை திருடுதல், வங்கி கணக்கில் உள்ள ரூபாயை திருடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலையில், மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு பிரிவு பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் போன்ற பொது இடங்களில் யுஎஸ்பி மூலம் சார்ஜ் போடும் போது Juice-jacking என்ற புதிய தொழில் நுட்ப முறைகேட்டில் ஹேக்கர்கள் ஈடுபட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, செல்போனுக்கு மால்வேர்ஸ் செயலிகளை அனுப்பி அதன் மூலம் செல்போனை கட்டுக்குள் எடுப்பது, டேட்டாக்களை திருடுவது போன்ற மோசடி வேலைகளில் ஹேக்கர்கள் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனால், பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய முறைகேடுகளில் சிக்காமல் இருக்க, பவர் பேங்க் அல்லது சொந்த கேபிள்களை பயன்படுத்திக் கொள்ளவும்.
யுஎஸ்பி போர்டர்களில் சார்ஜ் போடுவதற்கு பதிலாக பிளக் பாயிண்ட்கள் இருந்தால் அதில் சார்ஜ் போடலாம். முன்பின் தெரியாத கருவிகளுடன் உங்கள் செல்போன் Pairing ஆவதை தவிர்க்கும் வகையில் கூடுதல் செக்யூரிட்டி ஆப்ஷன்களை பயன்படுத்தலாம். உங்கள் போன் ஸ்விட்ச் ஆப் ஆகும் நிலையில் இருந்தால் மட்டுமே சார்ஜ் போடுவதை பற்றி நினையுங்கள். ஒருவேளை சைபர் முறைகேடு நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கலாம்.












Click it and Unblock the Notifications