மெட்ரோ டிக்கெட்.. அட அதை விடுங்க.. CMRL செயலியில் அடடே வசதி.! வீட்டில் இருந்தபடியே ஜம்னு ரெடியாகலாம்
சென்னை: சென்னையின் பொது போக்குவரத்தில் மெட்ரோ என்பது இப்போது தவிர்க்கவேமுடியாத ஒன்றாகிவிட்டது. மெட்ரோ பயணங்களை எளிதாகச் சென்னை மெட்ரோ சார்பில் செயலி இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த செயலியை நாம் பெரும்பாலும் டிக்கெட் எடுக்க மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், டிக்கெட் எடுப்பதைத் தாண்டி அதில் பல விஷயங்களை எளிதாகச் செய்ய முடியும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் டிராபிக் என்பது மிக முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது. மக்களை அதிகளவில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வைத்தால் மட்டுமே இங்கு டிராபிக் குறையும்.

சென்னை மெட்ரோ:
இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது மெட்ரோ. இப்போது சென்னையில் இரண்டு ரூட்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும், விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை நீல வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.
இதுபோக மாதவரம்- சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் 116.1 கிமீ தூரத்திற்கு மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த திட்டம் முழுமையாக நிறைவடையும் போது சென்னை மிக விரிவான ஒரு மெட்ரோ உள்கட்டமைப்பைக் கொண்ட நகரமாக மாறும்.
சிஎம்ஆர்எல் செயலி:
இது ஒருபக்கம் இருக்க தற்போதுள்ள மெட்ரோ ரூட்களில் மக்கள் பயணத்தைச் சவுகரியமாக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் சென்னை மெட்ரோவின் சிஎம்ஆர்எல் செயலி. நீங்கள் மெட்ரோவில் அடிக்கடி பயணிக்கும் நபர் என்றால் நிச்சயம் இது குறித்துக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதில் டிக்கெட் எடுத்திருக்கவும் கூட வாய்ப்பு இருக்கிறது. இதில் டிக்கெட் எடுக்கும் போது 20% சலுகை என்பதால் பலரும் இதில் டிக்கெட் எடுக்கிறார்கள்.
இது மட்டுமின்றி குறிப்பிட்ட ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கு எந்த ரூட்டில் நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் இந்த செயலியில் பார்ப்பார்கள். இந்த இரண்டும் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், இதையும் தாண்டி சென்னை மெட்ரோ செயலியில் பல வசதிகள் உள்ளன. அடிக்கடி மெட்ரோவில் பயணிப்போருக்கு அது பேருதவியாக இருக்கும்.

பார்கிங்:
அதில் முக்கியமானது பார்கிங் எவ்வளவு நிரம்பி இருக்கிறது என்பதை நீங்கள் செயலியிலேயே பார்க்கலாம். அதாவது மெட்ரோ செயலியை ஓபன் செய்து, மேலே இடதுபுறம் உள்ள மெனு (3 கோடுகள் போல இருக்கும்) கிளிக் செய்தால்.. அதில் 4வது இடத்தில் "Parking Availability" என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் செய்தால் அனைத்து ஸ்டேஷன்களின் பெயர்களும் வரும். அதில் உங்களுக்கு எந்த ஸ்டேஷன் வேண்டுமோ அதை கிளிக் செய்தால் போதும்.
எப்படி உதவும்:
உதாரணமாக சென்ட்ரல் மெட்ரோவை கிளிக் செய்தால் உள்ள 800 வாகனங்கள் பார்க் செய்யலாம், அதில் எவ்வளவு வாகனங்கள் நிற்கிறது.. எவ்வளவு காலியாக உள்ளன என அனைத்தும் தெரிந்துவிடும். மேலும், அந்த குறிப்பிட்ட மெட்ரோ நிலையத்தில் பார்கிங் கட்டணம் எவ்வளவு என்ற விவரமும் இருக்கும். அடிக்கடி மெட்ரோவில் பயணிப்போருக்கு இது பேருதவியாக இருக்கும். காலை கிளம்பும் போது, அவசரத்தில் சென்று பார்க்கிங் இல்லாமல் சுற்றுவதை விட வீட்டிலேயே பார்த்து அதற்கேற்ப பிளான் செய்து கொள்வது சிறப்பாக இருக்கும். பார்கிங் புல் என்றால் பைக் டாக்ஸியில் கூட மெட்ரோ நிலையம் போய்விடலாம்.
இதர வசதிகள்:
இது தவிர அதே மெனுவில் நாம் சிங்கார சென்னை கார்டிற்காக விண்ணப்பிக்கலாம். மேலும், நாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருக்கிறோம் என்றால் அருகே எந்த மெட்ரோ ஸ்டேஷன் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அனைத்தையும் விட மேலாகக் குறிப்பிட்ட மெட்ரோ நிலையத்தில் இருந்து மினி பஸ் எந்த ரூட்டில் எந்த நேரத்தில் இயக்கப்படுகிறது.. ஃபீடர் ஆட்டோ சேவை எப்போது என அனைத்தையும் அதிலேயே தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications