வெள்ளம் வடிந்துவிட்டதா? வீட்டுக்குள் போனதும் ஃப்ரீசர், சம்ப் மீது கவனம் மக்களே! #chennaifloods2023
சென்னை: மழை, வெள்ளம் முடிந்த பிறகு மக்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
சென்னையில் மிக்ஜாம் புயல் கடந்து ஆந்திராவுக்கு சென்ற நிலையில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. அதிக மழையால் நாராயணபுரம் ஏரி உடைந்துவிட்டது. இதனால் துரைப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்த வெள்ளநீரில் பாம்புகள், உள்ளிட்ட விஷஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் மழை, வெள்ளம் காலத்தின் போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது தெரியும்.
இதே மழை வெள்ளம் முடிந்தவுடன் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை உங்களுக்காக!
- சில நாட்களுக்கு ப்ரீசரில் வைக்கப்பட்ட இறைச்சிகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் 24 மணி நேரத்திற்கு மேல் இல்லாததால் ப்ரீசரில் இருக்கும் இறைச்சிகளை பயன்படுத்தாதீர்கள். அவை கெட்டு போயிருக்க வாய்ப்புள்ளது.
- குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடியுங்கள்.
- பிரஷ் காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்
- உங்கள் வீட்டை சுற்றி வெள்ளம் இருந்து அது வடிந்தபிறகு நீங்கள் செல்வதாக இருந்தால் முதலில் கிருமிநாசினி கொண்டு அவற்றை சுத்தப்படுத்த வேண்டும். அதன் பின்னர்தான் குழந்தைகளையும் வயதானவர்களையும் அங்கு அழைத்து செல்ல வேண்டும்.
- வெள்ளநீரில் மூழ்கிய கார்களை உடனடியாக ஸ்டார்ட் செய்யக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட இன்சூரன்ஸ் அதிகாரி பார்வையிட்ட பின்னரே டோ போட்டு எடுக்க வேண்டும்.
- எப்போது வெளியே போய் வந்தாலும் கால்களை கழுவிக் கொண்டுதான் உள்ளே வர வேண்டும்.
- அது போல் வீடுகளிலும் , ஷூக்களிலும் பாம்புகள், விஷஜந்துக்கள் ஏதேனும் ஒளிந்திருக்கிறதா என பாருங்கள்.
- சம்ப்பில் உள்ள மெட்ரோ நீரில் கழிவு நீர் கலந்திருக்கிறதா என பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
- ஏற்கெனவே பிடித்து வைக்கப்பட்ட தண்ணீரை வேறு எந்த பயன்பாட்டிற்காவது ஊற்றிவிட்டு நன்றாக குடங்களை கழுவி புதிய தண்ணீர் பிடிக்க வேண்டும்.
- அது போல் பிரிட்ஜில் ஏதேனும் பழைய பொருட்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தாமல் பிரிட்ஜை துடைத்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புயல் வெள்ளத்திற்கு பிறகு செயல்படுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications