நாட்டிலேயே டாப் இதுதான்.. குடிசைகள் அதிகமுள்ள மாநிலம் எது தெரியுமா? தமிழ்நாட்டில் இத்தனை குடிசை வீடா?
சென்னை: இந்தியாவிலேயே பீகாரில் தான் அதிக அளவுக்கு குடிசைகள் உள்ளதாகவும், நம்முடைய தமிழ்நாட்டில் 26 லட்சத்து 80 ஆயிரத்து 214 குடிசை வீடுகள் உள்ளதாகவும் மத்திய அரசின் தகவலில் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் விசிக விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். .. முக்கியமாக, விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீட்டுக்கான தொகையை உயர்த்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?

குடிசை வீடுகள்: கடந்த 2015 முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு வழங்கிய தொகை வருட வாரியாக தெரிவிக்க வேண்டும். மேலும், இந்தியாவில் இருக்கும் குடிசை வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு? மாநில வாரியாக விவரங்களை தரவேண்டும் என்று ரவிக்குமார் கேட்டிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு, மத்திய ஊரகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதில் இதுதான்: "பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை 2024 மார்ச் வரை மத்திய அரசு நீட்டித்திருக்கின்றன.. இதன்கீழ் நாடு முழுவதும் மொத்தம் 2.95 கோடி வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்சமயம், வீட்டுக்கான தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.
பிரதமர் வீடு கட்டும் திட்டம்: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்படி கோடி ரூபாய்களில் கடந்த 2016-17-ல் ரூ.690.89, 2017-18ல் ரூ.848.48, 2018-19ல் ரூ.502.79, 2019-20120ல் ரூ.487.52, 2020-21ல் ரூ.78.62 மற்றும் 2021-22ல் ரூ.928.92 கோடி அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் தமிழகத்துக்கு 2016-17 முதல் 2021-22 என கடந்த 6 வருடங்களில் 3,536.92 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்துக்கு செலவாகும் தொகையில் 60 சதவிகிதம் மத்திய அரசும், மீதமுள்ள 40 சதவிகிதத்தை மாநில அரசு வழங்க வேண்டும்..
அட்டவணை: இந்திய அளவில் மாநில வாரியாக குடிசை வீடுகள் எண்ணிக்கைகளையும் அட்டவணையாக மக்களவையில் சமர்ப்பித்திருந்தார். இதில், 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக, பொருளாதார கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குடிசை வீடுகளின் எண்ணிக்கை தரப்பட்டிருக்கிறது. 2.95 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டுவது என்ற இலக்கு அந்த கணக்கெடுப்பில் கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications