கருணாநிதியின் சமத்துவபுரம்! கடைசி நேரத்தில் டாக்டர் செய்த மாற்றம்! பலே கலைஞர்
சென்னை: முதல்வராக இருந்த போது கருணாநிதி கொண்டு வந்த சமத்துவபுரம் திட்டத்தில் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கொடுத்த ஐடியாவை ஏற்று அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைஞர் குறித்த நினைவலைகளை பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் காது, மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: கருணாநிதியின் நகைச்சுவை திறனை (சென்ஸ் ஆப் ஹியூமர்) எப்போதுமே மறக்கவே முடியாது. உடம்பு சரியில்லாமல் இருந்த போது கூட அவருடைய நகைச்சுவை அவரை விட்டு போகாது.
தூதுவளையை சாப்பிட்டால் நல்லது என யாரோ சொல்லியிருக்கிறார்கள் போல அதற்காக தூதுவளை துவையல், சூப், ரசம் என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வைத்து சாப்பிட்டதால் அவருக்கு தொண்டையில் புண் ஏற்பட்டுவிட்டது. எனக்கு தகவல் கிடைத்து நான் சென்றேன். நான் போன போது அவரால் பேசக் கூட முடியவில்லை.
தயாளு அம்மாளிடம் என்ன சாப்பிட்டார் மா என கேட்டேன். அதற்கு அவர், தூதுவளைதான்! அதில் துவையல், ரசம், சூப் செய்து கொடுத்தேன் என்றார். கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும் அம்மா, ஏன் ஒரே நாளில் அத்தனை கொடுத்தீர்கள், தொண்டையில் பாம் போட்ட மாதிரி ஆகிவிட்டதே என்றேன்.
தொண்டையை திறந்து பார்த்தால் 100 புண்கள் இருந்தன. உடனே 5 நாட்களுக்கு எதுவுமே சாப்பிடக் கூடாது! திரவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்றேன். அதற்கு அவர் அசம்பிளி என்றார். அதெல்லாம் ஒன்னும் கிடையாது, உங்களுக்கு தமிழகத்தை பற்றி கவலை, எனக்கு உங்களை பற்றி கவலை, எனவே 5 நாட்களுக்கு பேசவே கூடாது என்றேன்.
5 நாட்கள் கழித்து அவர் எப்படியிருக்கிறார் என பார்ப்பதற்காக சென்றேன். தொண்டையில் இருந்த புண்கள் எல்லாம் ஆறிவிட்டன. அப்போது 4 இலைதானே சாப்பிட்டேன். அதற்கே இவ்வளவு பிரச்சினையா என கேட்டுவிட்டு என் காது கிட்டே வந்து இரண்டு இலைக்கே இவ்ளோ பிரச்சினை இருக்கும் போது 4 இலைக்கு இருக்காதா என நகைச்சுவையாக கேட்டார்.
ஒரு முறை நான் அவருடைய வீட்டுக்கு போன போது ஜார்ஜ் பெர்னார்டுஷாவின் புத்தகத்தை எடுத்து வைத்திருந்தார். அதில் 110 ஆவது பக்கத்தை எடுத்து பார்க்குமாறு கூறினார். அதில் ஒரு சில வரிகளை கோடிட்டு வைத்திருந்தார். அதில் நோயாளிகள் நன்றாக ஆகிவிட்டால் மருத்துவர்களுக்கு வேலையே இல்லை, மருத்துவம் நன்றாக வேலை செய்யாவிட்டால்தான் டாக்டர்களுக்கு பிழைப்பு என்பதுதான் அதன் அர்த்தம்.
உடனே நான் அரசியலிலும் அப்படித்தான் அய்யா என்றேன் , உடனே சிரித்தார். அவர் ஆட்சியில் ஏதாவது முக்கியமான திட்டங்களை கொண்டு வருவதாக இருந்தால் அதை மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்துவார். அந்த வகையில் என்னிடம் சமத்துவபுரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
சமத்துவபுரம் எல்லாமே இறுதி நிலையில் இருந்தது. சமத்துவபுரம் என்றால் என்ன என கேட்டேன். அதற்கு கருணாநிதி, எல்லா ஜாதியினரையும் ஒரே இடத்தில் வைப்பதுதான் என்றார். நான் அதற்கு நல்லாயில்லை என்றேன். அவர் ஏன் என்றார், எல்லா ஜாதியினரையும் ஒன்றாக வைப்பது பெரிதல்ல! கண் தெரியாதவர், காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இவர்களை எல்லாம் மற்றவர்களுடன் வைப்பதுதான் சமத்துவம் என்றேன்.
உடனே என் கண் முன்னாடியே தலைமை செயலாளருக்கு போன் செய்து சமத்துவபுரத்தில் 4 வீடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கிவிடுங்கள் என்றார்.


Click it and Unblock the Notifications
