ரூ 1000 மகளிர் உரிமைத் தொகைக்கான மாதிரி விண்ணப்பப் படிவம்.. "இந்த" டீட்டெய்லுடன் தயாராக இருங்க!
சென்னை: ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை மாதிரி விண்ணப்பப் படிவத்தில் என்னென்ன விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன தெரியுமா?
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வென்றால் இந்த நலத்திட்டங்களை எல்லாம் செய்வோம் என தேர்தல் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் முக்கியமானது மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கும் திட்டமாகும்.

சொந்த வீட்டு வேலைகளை செய்யும் பெண்களை அங்கீகரிக்கும் வகையில் அனைத்து பெண்களுக்கும்ரூ 1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை அந்த மகளிர் உரிமைத் தொகை கொடுக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இந்த நிலையில் அண்ணா பிறந்த நாளில் இந்த திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து யார் யாருக்கெல்லாம் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் பட்டியலை வெளியிட்டார். இந்த திட்டத்தின் பயனாளிகளை அடையாளம் காண மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
அதில் குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் என பெயரிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையிலான குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவர்.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 2.5 லட்சத்திற்கு கீழே உள்ள குடும்பங்களாக இருத்தல் வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.
ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட் மின்சாரத்தை விட குறைவாக பயன்படுத்தும் குடும்பங்களாக இருத்தல் வேண்டும். சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர் , லாரி உள்ளிட்ட வாகனங்களை வைத்திருக்காதவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என அந்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் ரூ 1000 உதவித்தொகை பெற அரசு மாதிரி விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டுள்ளது. அதில் என்னென்ன இருக்கிறது தெரியுமா. மகளிரின் திருமண நிலை, சொந்த வீடா, வாடகை வீடா, ஆதார் எண் என்ன, வங்கிக் கணக்கு, குடும்ப உறுப்பினர்கள் யார் யார் இருக்கிறார்கள், நிலம் உள்ளதா, ஆண்டு வருமானம், கார், ஆட்டோ இருக்கின்றனவா போன்றவை கேட்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications