நாட்டிலேயே எந்த ஊரில் மெட்ரோ டிக்கெட் அதிகம்! சென்னை எங்கே? 5 ரூபாய் மெட்ரோ எங்கு இருக்கு தெரியுமா?
சென்னை: இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவைக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போக்குவரத்து அதிகரிப்பு, மக்கள் நெருக்கடி, ஈஸியான பயணம் என அனைத்திற்கும் ஒரே தீர்வாக மெட்ரோ ரயில்கள் உள்ளன. அப்படி நமது நாட்டில் பல நகரங்களில் மெட்ரோ சேவை வழங்கப்படுகிறது. இப்போது நமது நாட்டில் காஸ்ட்லியான 5 மெட்ரோ ரயில்கள் எங்கே உள்ளன மற்றும் மலிவு விலை மெட்ரோ எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
நமது நாட்டில் இப்போது 11 மாநிலங்களில் 23 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 1000 கிமீக்கு மேல் மெட்ரோ சேவை இருக்கிறது. இருப்பினும், அனைத்து ஊர்களிலும் மெட்ரோ கட்டணம் ஒரே அளவு இல்லை. பல்வேறு காரணங்களால் மெட்ரோ கட்டணம் ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொன்றாகவே இருக்கிறது. இந்தியாவில் காஸ்ட்லியான 5 மெட்ரோ ரயில்கள் எங்கே உள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

காஸ்ட்லி மெட்ரோ
இந்தியாவில் காஸ்ட்லி நகரங்களில் ஒன்றான பெங்களூரில் தான் காஸ்ட்லி மெட்ரோவும் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இங்கே மெட்ரோவுக்கான கட்டணம் 50% வரை அதிகரிக்கப்பட்டது. இதனால் அதிகபட்சக் கட்டணம் ரூ.60ல் இருந்து 90 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே காஸ்ட்லியான மெட்ரோவாக பெங்களூர் மெட்ரோ மாறியுள்ளது.
இப்போது பெங்களூரில் 25 கிமீ தாண்டிப் பயணிக்கும் போது ரூ.90 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெங்களூர் மெட்ரோவில் குறைந்தபட்சமாக 2 கி.மீ. பயணத்திற்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் ஸ்மார்ட் கார்டு மூலம் பயணிக்கும்போது பீக் ஹவரில் 5 சதவீதமும் நான் பீக் ஹவரில் 10 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி இருந்தாலும் கூட பெங்களூர் தான் காஸ்ட்லி மெட்ரோவாக இருக்கிறது.
டெல்லி மெட்ரோ
அடுத்த இடத்தில் தேசிய தலைநகர் டெல்லி வருகிறது. சுமார் 353 கிமீ தொலைவுக்கு மெட்ரோ சேவையைக் கொண்ட டெல்லியில், ரேட் பெங்களூரை விட கொஞ்சம் குறைவுதான். அங்கு 2 கிமீ வரை பயணிப்போருக்குக் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.10ஆகும். 32கிமீ+ பயணிப்போருக்கு அதிகபட்சமாக ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல ஸ்மார்ட் கார்ட், க்யூஆர் முறையில் பயணிப்போருக்கு 10% சலுகையும் வழங்கப்படுகிறது. அதேபோல ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் எப்படி பயணித்தாலும் 10% சலுகை வழங்கப்படுகிறது.
ஹைதராபாத் & மும்பை மெட்ரோ
இதில் மூன்றாவது இடத்தில் ஹைதராபாத் மெட்ரோ வருகிறது. இங்கும் குறைந்தபட்சக் கட்டணம் என்புது 2 கிமீ தொலைவுக்கு ரூ.10 தான். அதேநேரம் அதிகபட்சமாக 26+ கிமீ பயணிப்போருக்கு ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் அங்குச் சலுகை கொஞ்சம் குறைவு தான். கார்ட் மூலம் பயணிப்போருக்கு நான் பீக் ஹவர்களில் மட்டுமே 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதில் 4வது இடத்தில் மும்பை மெட்ரோ வருகிறது. இங்கு 59 கிமீ தொலைவுக்கு மெட்ரோ நெட்வோர்க் இருக்கிறது. மும்பை போன்ற பெரிய நகருக்கு இது குறைவு தான். இதன் காரணமாகவே அங்கு விரிவாக்கம் நடந்து வருகிறது. மும்பையில் இப்போது 3 கிமீ பயணத்திற்கு ரூ.10 குறைந்தபட்சமாக வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 42+ கிமீக்கு ரூ.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரூ.80 என்றால் இது 2ம் தானே வரணும் எனக் கேட்கலாம். ஒரு கிமீக்கு எவ்வளவு தொகை என்பதைக் கணக்கிடும்போது 42 கிமீ தான் ரூ.80 என்பதால் 4ம் இடத்திலேயே மும்பை வருகிறது.
சென்னை மெட்ரோ
அடுத்து கடைசி இடத்தில் சென்னை மெட்ரோ வருகிறது. சென்னையில் இப்போது வெறும் 45 கிமீ தொலைவுக்கு மட்டுமே மெட்ரோ சேவை இருக்கிறது. இங்கும் விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்போது சென்னையில் 2கிமீ தொலைவுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு 32+ கிமீ பயணிப்போருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் மற்ற மெட்ரோகளை விட அங்குச் சலுகை அதிகம். ஸ்மார்ட் கார்டு அல்லது டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுத்துப் பயணிப்போருக்கு 20% சலுகை வழங்கப்படுகிறது.
மலிவு விலை மெட்ரோ
இவை எல்லாம் காஸ்ட்லி மெட்ரோ ரயில்களின் லிஸ்ட். அப்போ நாட்டிலேயே மலிவான மெட்ரோ சேவை எங்கே என்று நீங்கள் கேட்கலாம்.. நாட்டிலேயே மிக குறைந்த ரேட்டிற்கு மெட்ரோ சேவை வழங்குவது கொல்கத்தா தான். இங்கு மெட்ரோவில் குறைந்தபட்ச டிக்கெட் 5 ரூபாய் தான். மேலும், 30 கிமீ வரை பயணித்தால் கூட ரூ.25 தான் டிக்கெட். இதன் மூலம் நாட்டில் குறைந்த விலைக்கு மெட்ரோ சேவை வழங்கும் நகரமாக கொல்கத்தா இருக்கிறது.












Click it and Unblock the Notifications