"1969 ஆம் ஆண்டு நீர்வளத் துறை அமைச்சராக இருந்தது யார்"னு விஜய் கேட்டாரே! அவர் யார் தெரியுமா?
சென்னை: 1969 ஆம் ஆண்டு நீர்வளத் துறை அமைச்சராக யார் இருந்தார் என்பதையெல்லாம் கேட்டு காவிரி விவகாரத்தில் கீழ்த்தரமான அரசியலை நாங்கள் செய்ய மாட்டோம் என முதல்வர் விஜய் கூறியிருந்தார். அப்போதைய நீர்வளத் துறை அமைச்சர் யார் என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது. மேகதாது அணை குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியிருப்பதாவது: மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா முதல்வர் நேரில் சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட நிதியுதவி கோரியிருந்தார்.
நீர் வளத் துறை அமைச்சரவையும் சந்தித்து மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்தார். கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பான பல்வேறு பணிகளை கர்நாடகா செய்து வருகிறது. இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளது. ஆனால் நாம் ஏன் இன்னும் கூட்டவில்லை, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம், என்ன பயம் என கேள்வி எழுப்பியிருந்தார்.
அப்போது முதல்வர் விஜய் பதிலளிக்கையில் காவிரி தமிழகத்தின் வாழ்வாதாரமும் உணர்வுப்பூர்வமான ஒன்று என்பதால் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யும் எண்ணம் தவெக அரசுக்கு துளிக் கூட இல்லை.
மேகதாது திட்டத்திற்கு எந்தவித சட்டப்பூர்வமான அனுமதியையும் கர்நாடகா அரசுக்கு வழங்கக் கூடாது என பிரதமருக்கு நான் கடிதம் எழுதி அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
காவிரி நீர் பிரச்சினையிலும் சரி, மேகதாது அணை விவகாரத்திலும் சரி எந்த சூழலிலும் தமிழகத்தின் உரிமைகளை அரசு விட்டுக் கொடுக்காது. 1969 ஆம் ஆண்டு சட்டசபையில் ஒரு விவாதம் நடந்தது. அப்போது நீர்வளத் துறை அமைச்சராக இருந்தது யார், அப்போது அணை கட்ட அனுமதித்தது யார் என்பது போன்ற கீழ்த்தரமான கேள்விகளை கேட்டு அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை.
காவிரி விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும். இதை தமிழக மக்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும். ஏற்கனவே இருந்த எதிர்க்கட்சி தலைவர் கருத்திருமன் சொன்னதை சபையில் சொல்ல விரும்புகிறேன். காவிரி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களும், ஒன்றிய அரசும் அமர்ந்து முடிவெடுக்க வேண்டும் என1969ம் ஆண்டிலேயே பேசியிருக்கிறார். ஆனால், அதன் பிறகு பிரச்னை வேறு மாதிரி சென்று விட்டது என எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு விஜய் பேசினார். விஜய் 1969-ஆம் ஆண்டு என சொல்ல தொடங்கியதும் பக்கத்தில் இருந்த கே.என்.நேருவிடம் உதயநிதி கேட்டு தெரிந்து கொண்டார்.
1969 ஆம் ஆண்டு நீர்வளம் மற்றும் பாசன மேலாண்மை ஆகியவை பொதுப் பணித் துறையின் கீழ் இருந்தன. அப்போது மு.கருணாநிதி முதல்வராக பிப்ரவரி 10ஆம் தேதி 1969 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அதற்கு முந்தைய மாதம் வரை கருணாநிதி பொதுப் பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதாவது நீர்வளம், பாசன மேலாண்மையுடன் இணைந்த பொதுப் பணித் துறையின் அமைச்சராக பதவியில் இருந்தார். அவரது அமைச்சரவையில் பொதுப் பணித் துறையில் அமைச்சராக இருந்தவர் எஸ்.ஜே.சாதிக் பாஷா ஆவார்.


Click it and Unblock the Notifications
