தமிழ்நாடே திமுக மீது சேற்றை வாரி வீசும்! உங்க வீட்டுப் பணமா? : எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினை கேள்வி கேட்டால் கோபப்படுகிறார் என்றும் அவர் அரசு வரிப் பணத்தைத்தான் மக்களுக்கு தருகிறார். சொந்த பணத்தைத் தரவில்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.

ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, மாயவரம் எனக் கிட்டத்தட்ட 8 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் திருவண்ணாமலையில் ஏற்ட் மண் சரிவு 7 உயிர்களைப் பறித்துள்ளது. அவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என் அரசு அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக அமைச்சர் பொன்முடி நேற்று சென்றிருந்த போது அங்கே கூடியிருந்த மக்கள் அவர் மீது சேற்றை வாரி இரைத்தனர். அந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி, “சேறு வீசியதைப் பெரிதுபடுத்தி அரசியலாக்க விரும்பவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

premalatha vijayakanth chief minister stalin

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்பைப் பார்வையிடச் சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக அரசு மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “மழை வெள்ள பாதிப்புகளைப் பற்றி அறிய உடனடியாக விழுப்புரம் சென்றேன். அங்கே கட்சி நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்றாட தேவைக்கு வேண்டிய பொருட்களை வழங்கினேன். சிலரது வீடுகள் சேதமடைந்திருந்தது. அதற்கான நிதி உதவியையும் அளித்தேன்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதலே மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி கோரிக்கை விடுத்தோம். மழை வெள்ளத் தடுப்புக்காக தனியாக ஒரு திட்டம் வகுக்கக் கேட்டுக் கொண்டும் வருகிறோம். ஆனால், அதைப் பற்றி அரசு இதுவரை சரியாகத் திட்டமிடவில்லை என்பதுதான் உண்மை. அதற்கான விளைவை விழுப்புரத்தில் பார்த்தோம். நான் பாதிக்கப்பட்ட 10 பகுதிகளைப் பார்வையிட்டேன். அங்கே ஏற்பட்டுள்ள பாதிப்பில் 50%தான் ஊடகங்களில் வெளியாகியது. பேருந்து நிலையம், மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எனப் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கித் தவிக்கின்றன. அந்தச் செய்திகள் வெளியே முழுமையாக வரவில்லை.

விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, மாயவரம் எனப் பல மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த அரசாங்கம் இருந்தாலும் சென்னையில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மற்ற மாவட்டங்கள் சார்ந்து யோசிப்பது இல்லை. சென்னை மட்டுமே தமிழ்நாடு இல்லை. நான் விழுப்புரம் போனபோது அங்கே 3 நாட்களாக மின்சாரம் இல்லை. குடிக்க நீர் இல்லை. சாப்பாடு இல்லை. தங்க இடம் இல்லை எனப் பலரும் கண்ணீர் மல்கப் பேசினார்கள். அதைக் கேட்கவே மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது. மக்களின் அத்தியாவசிய தேவையை அரசு உடனடியாக செய்து தரவேண்டும். நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும். சுமார் 2 லட்சம் ஹெக்டேர் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால், 'எடப்பாடிக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார். அதானி பற்றி ராமதாஸ் கேள்வி எழுப்பினால், ஸ்டாலினுக்குக் கோபம் வருகிறது. எந்த விசயமும் நெருப்பு இல்லாமல் புகையாது. நீங்கள் சந்திக்கவில்லை என்றால் நேரடியாகப் பதில் சொல்லலாம். எதற்காக முதல்வர் கோபப்படுகிறார்? நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படிப் பேசினீர்கள்? எவ்வளவு போராட்டம் நடத்தினீர்கள்? அதை நீங்கள் மட்டும் பேசலாம், செய்யலாமா?

அன்றைக்கு ஸ்டாலினுக்கு வேலையே இல்லை. அவருக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என யாரேனும் சொன்னார்களா? ஆளும் கட்சியைக் கேள்வி கேட்பது எதிர்க்கட்சியின் கடமை. கேட்டால், ஏன் தனிப்பட்ட வகையில் உங்களுக்குக் கோபம் வருகிறது. அப்படி என்றால் உங்களின் இயலாமை என இதை எடுத்துக் கொள்ள முடியுமா?

நாங்கள் ஆளும் கட்சி இல்லை. அதிகாரம் எங்கள் கையில் இல்லை. சொந்தமாகச் சம்பாதித்த காசை வைத்து விழுப்புரம் மக்களுக்குப் பல உதவிகளைச் செய்துள்ளோம். அரசாங்க காசை தானே நீங்கள் கொடுக்கிறீர்கள். உங்கள் வீட்டுக் காசையா கொடுக்கிறீர்கள்? பிறகு ஏன் கோபப்படுகிறீர்கள்? இன்றைக்கு ஒட்டுமொத்த மக்கள் கொந்தளித்துப் போய் உள்ளனர். அதன் வெளிப்பாடு பல வழிகளில் வெளியே வருகிறது.

பொன்முடி மீது சேற்றை வாரி வீசிய காட்சியைப் பார்த்தேன். இதான் உண்மை நிலை. மீடியாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உண்மையை மறைக்க அரசு முயன்றால் அது நடக்காது. அதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது. அரசாங்கத்தின் செயல்பாடு சேற்றை வாரி மக்கள் இரைக்கக்கூடிய நிலையில்தான் இருக்கிறது” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+