"அண்ணாத்த"! ரஜினி பைக்கின் நம்பர் பிளேட் பார்த்தீங்களா.. இதெல்லாம் வேற லெவல் திங்கிங்!
சென்னை: அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள எண் குறித்த விளக்கத்தை ரசிகர்கள் வைரலாக்கி சிலாகித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதன் பர்ஸ்ட் லுக்கும் மோஷன் போஸ்டரும் நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியானது. அரசியலுக்கு முழுக்கு போட்டு ரசிகர்களை வேதனைக்குள்ளாகிய நிலையில் நேற்று வெளியான இந்த பர்ஸ்ட் லுக்கும் மோஷன் போஸ்டரும் வைரலாகி வருகிறது.

கவரப்பட்ட டயலாக்
அந்த மோஷன் போஸ்டரில் ரஜினி பேசும் டயலாக் அனைவராலும் கவரப்பட்டு வருகிறது. "நாடி நரம்பு முறுக்க முறுக்க, ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க.. அரங்கம் முழுவக்க தெறிக்க தெறிக்க.. தொடங்குது ஓங்கார கூத்து என வசனத்துடன் ரஜினி இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது போல் அரிவாளை தேய்த்து கொண்டே செல்வதால் அதன் முனைகள் நெருப்பில் காய்ச்சி எடுத்தது போல் செக்க செவேல் என உள்ளது.

ரஜினியின் குரல்
இந்த மோஷன் போஸ்டரில் ரஜினியின் குரல் ஒலிக்கிறது. தலையில் ஹெல்மெட், காதில் ஹெட் போனுடன் முகத்தில் கடுங்கோபத்தில் புல்லட்டில் பயணிக்கிறார். அவர் பயன்படுத்தும் புல்லட் வண்டியின் நம்பர் குறித்த விளக்கத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். அதில் WB 03 SS 1212 என இருந்தது. இதில் WB என்றால் World Box Office King என்றும் 03 என்றால் 3 தலைமுறையினரையும் கவர்ந்தவர் என்றும் SS என்றால் சூப்பர் ஸ்டார் என்றும் 1212 ரஜினியின் பிறந்தநாளை குறிப்பதாகவும் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் WB என்றால் மேற்கு வங்கத்தின் குறியீடு என்பதையும் மறந்து ரசிகர்கள் இதை வேர்ல்டு பாக் ஆபிஸ் கிங் என எடுத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி நடித்த படங்களில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தவை என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அது போல் அன்று 1980களில் அப்பாவோ அல்லது அம்மாவோ ரஜினி ரசிகராக இருந்திருப்பர். அவரது மகனோ, மகளோ சூப்பர் ஸ்டாரின் ரசிகராக இருந்திருக்கிறார்கள். இன்று அவர்களுடைய குழந்தைகளும் ரஜினி ரசிகர்களாக உள்ளனர். இதைத்தான் 3 தலைமுறையினரை கவர்ந்த தலைவர் என்கிறார்கள். கடந்த ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் அவரது பிறந்தநாளை மிக மிக பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். தற்போது அரசியலுக்கு வராவிட்டாலும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த அவர் படங்களில் நடித்தாலே போதும் என்ற மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் அண்ணாத்த தீபாவளியை கொண்டாடுவதையொட்டி அவரது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள் என்றே தெரிகிறது.

மோஷன் போஸ்டர்
இது போல் ஒவ்வொரு நடிகர்களின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்களில் இடம்பெறும் விஷயங்களை குறிப்பிட்டு அவரவர் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள். கடந்த முறை பேட்டை படத்தில் அவர் பயன்படுத்திய கார் மற்றும் அவருடன் இருந்த நாய் ஆகியவை பிரபலம் அடைந்தன. அது போல் தர்பாரில் அவரது பெயரான ஆதித்யா அருணாச்சலம், இயக்குநர் ஏஆர் முருகதாஸுடன் தொடர்புடையது. ஆதித்யா என்பது அவரது மகன், அருணாச்சலம் அவருடைய தந்தை பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications