கருப்பை, கருமுட்டை நீக்கம் வரமா? சாபமா?.. வறுமைக்காக நீக்கும் அபாயம்?.. பக்க விளைவுகள் என்ன?
சென்னை: கருப்பை நீக்கம், வரமா, சாபமா என்பது குறித்து விவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதுகுறித்தும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும் மருத்துவர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த டாக்டர் வினோத்குமார் MD Ortho என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது : அனைவருக்கும் வணக்கம், Hysterectomy - கருப்பை நீக்கம் - வரமா ? சாபமா ? . ஏன் இப்படி ஒரு தலைப்பு என்று பலரும் யோசிக்கலாம் , இதற்கான காரணத்தை விளக்குகிறேன் ! நான் கடந்த 4 வருடமாக மகாராஷ்டிராவில் வேலை செய்கிறேன்.
இங்கு எலும்புகள் தொடர்பான பிரிவு OPD இல் வரும் நோயாளிகளில் அதிகமானவர்கள் பெண்கள் தான். இவர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனை மூட்டுவலி ,முதுகுவலி , கழுத்துவலி. வயது 30 கூட இருக்காது, Xray பரிசோதனையில் எலும்பு தேய்மானம் ஏற்பட்டிருக்கும் , லேசாக தடுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிவுகள் ஏற்பட்டவர்கள் பலர், ஏன் இவ்வளவு பிரச்சினைகள் ?

முக்கிய காரணம்
இதற்கு முக்கியக் காரணம் கருப்பை + கருமுட்டை அகற்றம் . இயற்கையாக 45-50 வயதில் ஏற்பட வேண்டிய Menopause - இறுதி மாதவிடாய் (மாதவிடாய் நிறுத்தம் ) செயற்கையாக 25 வயதில் ஏற்படுவதால் , எலும்பு தேய்மானம், மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

உயிர் காக்கும் சிகிச்சை
ஒரு சில பிரச்சனைகளுக்காக உயிர் காக்கும் சிகிச்சை முறையை குறைசொல்வதா ? - இவர்களில் பலருக்கும் கருப்பை நீக்கம் செய்ய காரணம் - வறுமை & முறையான விழிப்புணர்வு இல்லாதது தான். இவர்களில் பெரும்பாலானோர் கரும்புகளை வெட்டும் பணியில் ஒப்பந்தம் மூலம் வேலைக்கு செல்கிறார்கள்.

வலி மற்றும் தொற்று
ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடர்பான வலி மற்றும் தொற்று பிரச்சினைகளை தவிர்க்க இவர்களுக்கு புகுத்தப்பட்ட தவறான முடிவு தான் கருப்பை + கருமுட்டை நீக்கம். இதனால் வாழ்நாள் முழுவதும் எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு தினந்தினம் வலி மருந்துகள் எடுக்கும் நிலை.

கருப்பை நீக்கம்
21-ஆம் நூற்றாண்டில் இப்படி நடக்க வாய்ப்பு இருக்கா டாக்டர் ? 2019 இல் மகாராஷ்டிரா Beed மாவட்டத்தில் செய்த ஆய்வில் கிட்டத்தட்ட 17% -36 % பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது, ஒட்டுமொத்த இந்திய கருப்பை நீக்கம் - 3.2% தான். கருப்பை நீக்கம் ஒரு உயிர் காக்கும் சிகிச்சை முறை ,ஆனால் வறுமை இதற்கு ஒரு காரணமாக இருக்க கூடாது.

பெண்கள்
பெண்கள் தங்களுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும், தலைவலி போகத் திருகுவழி வந்தது என்ற பழமொழி போல ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்க நினைத்து வாழ்நாள் முழுக்க பல உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் . மருத்துவக் காரணங்களால் கருப்பை நீக்கம் செய்யும் போது அது உயிர் காக்கும் வரம், ஆனால் முறையான விழிப்புணர்வு இல்லாமல் செய்யப்படும் போது அது வாழ்நாள் முழுக்க அனுபவிக்கும் சாபமாக தான் அமைகிறது.

மருந்துகள்
கருப்பை + கருமுட்டை நீக்கம் செய்தபின் எலும்புகள் தொடர்பான பிரச்சினைகளை தவிர்க்க - கால்சியம் & வைட்டமின் D மருந்துகள்/ நிறைந்த உணவுகள் எடுப்பது அவசியம். Estrogen இரத்தத்தில் குறைவதால் - Osteoclast அதிகமாக எலும்புகளில் தேய்மானம் ஏற்படுத்துகிறது. இவ்வாறு மருத்துவர் தனது தொடர் ட்வீட்டில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications