காரணமே வேற.. திருமணமாகி 3 மாதம்! சென்னை மருத்துவர் திடீர் மரணம் - பகீர் கிளப்பும் மருத்துவர் சங்கம்
சென்னை: சென்னையில் இளம் மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மருத்துவர்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது, "இளம் வயதில் மருத்துவர்கள் திடீர் மரணமடைவது எனும் சோக நிகழ்வு தொடர்ந்து கொண்டே உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. டாக்டர்.மருதுபாண்டியன் என்ற 30 வயதேயான இளம் மருத்துவர் இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறையில், சென்னை மருத்துவக் கல்லூரியிலும், அதனுடன் இணைந்த ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் பயின்று வந்தார். 24 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ச்சியாக அவர் பணிபுரிந்துள்ளார்.

பிறகு, அவரது அறையில் அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. சமூக அக்கறை உள்ள மருத்துவர். அவரது மரணம் மிகுந்த அதிர்ச்சியை, வேதனையை தருகிறது. கடும் பணிச்சுமையால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களும் கடும் பணிச்சுமை அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளன. அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பதை நேர்மையான, வெளிப்படையான விசாரணை மூலம், உடற் கூறாய்வு மூலம் கண்டறிய வேண்டும்.
டாக்டர் மருதுபாண்டியன் மரணத்திற்கு காரணமான காரணிகள் குறித்து ஆராய, ஓர் நடுநிலையான நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திட வேண்டும். டாக்டர்.மருதுபாண்டியன் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடாக தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களும், பட்ட மேற்படிப்பு மாணவர்களும் 24 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கப்படுகின்றனர்.
இத்தகைய கடும் உழைப்புச் சுரண்டல் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இது, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு எதிரானதாகும். சென்ற ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியின் மாணவர் ஒருவர் கூடுதல் பணி நேரம், பணிச்சுமை,மற்றும் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி .ஆர். இரவீந்திரநாத் அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினார். அவரது தலையீட்டால் அத்தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டது.
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் 24 மணி நேரப் பணிக்குப் பிறகு வீடு திரும்பிய இளம் மருத்துவர் சோலைச்சாமி இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்துள்ளார். இது போன்று ஏராளமான இளம் மருத்துவர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படுகிறார்கள் .மரணம் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. மருத்துவர்களின் பணி கடுமையான பணி. அப்பணியில் 24 மணி நேரப் பணி என்பது கடும் பாதிப்பை உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஏற்படுத்துகிறது.
எனவே, 24 மணி நேர பணி என்பதை அரசு மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட ,வட்டார மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முற்றிலும் ஒழிக்க வேண்டும். 24 மணி நேரப் பணியால், இனியும் மருத்துவர்கள் பாதிக்கப்படக் கூடாது. யாரும் பலியாவது கூடாது. இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். தொழிலாளர் நலன்களுக்கு எதிரான இந்த 24 மணி நேர தொடர்ச்சியான பணியை (24 hours continuous floor or call duty) ரத்து செய்ய வேண்டும்.
பயிற்சி மருத்துவர்கள்( Interns) முதுநிலை (PGs) மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள்( Super Speciality) 24/36/48 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பணி செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இக்கொடுமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் (Interns) முதுநிலை (PGs) மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் (Super Speciality) , செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதிசெய்ய வேண்டும். அதற்கேற்ப கூடுதலாக, மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், மருத்துவ மாணவர்களை மிரட்டுவதையும், கொத்தடிமைகளைப் போல் நடத்துவதையும் உடனடியாக கைவிட வேண்டும். அவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும்.
கடும் பணிச்சுமையானது மருத்துவர்களுக்கு உடல் மற்றும் உள உளைச்சலை ஏற்படுத்துகிறது. தற்கொலைகளுக்கும் வழிவகுக்கிறது. மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் , பல இளம் மருத்துவர்களின் உயிரை பலி கொள்கிறது. மருத்துவர்களின் சராசரி ஆயுட்காலம் குறைகிறது. இவை அனைத்தையும் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. எனவே, மருத்துவர்களின் பணிச்சுமை குறைக்கப்பட வேண்டும். எனவே "மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களின் நலன் காக்க நல வாரியம்,"அமைத்திட வேண்டும்.
சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டு, கிண்டி அருகே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலிருந்து தொலைவான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், சிலர் சாலை விபத்துக்கு ஆளாகின்றனர். மருத்துவமனையிலிருந்து தொலைவான இடத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்களை தங்க வைப்பது, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதி முறைகளுக்கும் எதிரானதாகும். எனவே, அவர்களுக்கு ராஜிவ் காந்தி மருத்துவமனை அருகிலேயே தங்கும் வசதியை செய்து கொடுக்க வேண்டும். புதிய விடுதியை விரைவாக கட்டிக் கொடுத்திட வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications