யு.டி.ஆர். பட்டா .. 42 ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு.. பல குடும்பங்களுக்கு இது மிகப்பெரிய நல்ல செய்தி
சென்னை: யு.டி.ஆர். திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வருவாய் ஆவணங்களில் குறிப்பிட்ட அந்த நிலம் யாருடைய பெயரில் இருந்தது? என்பதை அறிந்தால் மட்டுமே நிலத்தின் உரிமையை சம்பந்தப்பட்ட நபரால் நிலைநாட்ட இயலும். ஆனால், இந்த ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருவாய்த்துறை அலுவலர்களிடம் இருந்து பெறுவது சாத்தியமே இல்லை என்கிற நிலை இருக்கிறது.இந்த சூழலில் யு.டி.ஆர். பட்டா தொடர்பான 42 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க மறுக்கக்கூடாது என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1984-87 காலகட்டத்தில் தமிழக அரசால் நில உரிமை பதிவுகளை மேம்படுத்தும் வகையில் யு.டி.ஆர். திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் என்ன வென்றால், அந்த காலகட்டத்தில் நில உரிமை ஆதாரங்களின்றி இருந்த நபர்களுக்கு, வருவாய் ஆவணங்கள் மூலம் நில உரிமை புதுப்பிக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாக்கள் யு.டி.ஆர். பட்டாக்கள் என அழைக்கப்படுகிறது. யு.டி.ஆர். பட்டா வழங்கும்போது ஏற்கனவே அனுபவத்தில் இருந்தவர்களின் நிலங்கள் வேறொருவரின் பெயருக்கு தவறுதலாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விட்டதாக தமிழகம் முழுவதும் புகார்கள் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஏராளமானோர் மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்து, அந்த மனுக்கள் நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.
ஏனெனில் பழைய பட்டா, சிட்டா, நில அளவைப் பதிவுகள் ஆகியவற்றில் முரண்பாடுகள் இருந்துள்ளது. அதேபோல் ஒரே சர்வே எண்ணில் பலருக்கு நிலம் இருந்தால், சரியான எல்லை மற்றும் பரப்பளவைப் பொருத்திப் பார்ப்பதில் தவறு ஏற்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் ஒரே பெயரைக் கொண்டவர்கள், வாரிசுரிமை மாற்றங்கள் அல்லது பழைய பதிவுகளின் தெளிவின்மை காரணமாக தவறான நபரின் பெயர் பதிவாகி உள்ளது. அதேபோல் நிலத்தின் உண்மையான அனுபவம், பழைய ஆவணங்கள், பக்கத்து நில உரிமையாளர்களின் விவரங்கள் ஆகியவற்றை முழுமையாகச் சரிபார்க்காமல் பதிவு செய்த காரணத்தாலும் தவறுகள் ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2004-ஆம் ஆண்டுகளிலேயே யு.டி.ஆர். பதிவுகளில் ஏற்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான வருவாய்த் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. ஆனால் சரியான ஆவணங்கள், ஆதங்கள் கிடைக்காத காரணத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காண அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் யு.டி.ஆர். திட்டத்தில் ஏற்பட்ட தவறுகளால் உண்மையான நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களது மனுக்களை விரைவாக விசாரித்து, ஆவணங்களின் அடிப்படையில் நியாயமான தீர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் பலர் மாவட்ட நீதிமன்றத்தையும், ஐகோர்ட்டையும் நாடி உள்ளனர். யு.டி.ஆர். பட்டா தொடர்பான முந்தைய ஆவணங்கள் மூலம் நீதிமன்றத்தில், நிலத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் இருக்கிறார்கள். அதாவது, யு.டி.ஆர். திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு வருவாய் ஆவணங்களில் குறிப்பிட்ட அந்த நிலம் யாருடைய பெயரில் இருந்தது? என்பதை அறிந்தால் மட்டுமே நிலத்தின் உரிமையை சம்பந்தப்பட்ட நபரால் நிலைநாட்ட முடியும் என்கிற நிலை இருக்கிறது.
ஆனால், இந்த ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருவாய்த்துறை அலுவலர்களிடம் இருந்து பெறுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்கிற நிலை இருக்கிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் யு.டி.ஆர். திட்டத்திற்கு முந்தைய (அதாவது 42 ஆண்டுகளுக்கு முந்தைய) நில ஆவணங்கள், பழைய நில அளவை புலப்படங்கள், பழைய செட்டில்மென்ட் பதிவேடு, மறு நிலவரி திட்ட செட்டில்மென்ட் பதிவேடு உள்ளிட்டவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க மறுக்கக்கூடாது என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா ஓச்சேரி கிராம யு.டி.ஆர். பட்டா ஆவணங்களை கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தகவல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், "அலுவலக வேலை நாட்களில், வேலை நேரத்தில் மனுதாரரை அழைத்து, அவர் கோரிய நில ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும். இதன்பின்னர், மனுதாரர் தனக்கு தேவையான ஆவணங்களை கோரும்பட்சத்தில், உரிய சான்றொப்பத்துடன் பொதுத்தகவல் அலுவலர் கட்டணமின்றி அவற்றை வழங்க வேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
