இது யோசிக்காத ரூட்! ஈரோடு கிழக்கில் அப்படியே நோட்டாவிற்கு போகும் அதிமுக வாக்கு? நாம் தமிழருக்கு செக்
சென்னை: ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகளை நோட்டா பக்கம் கொண்டு செல்ல உள்ளூர் தலைகள் முயன்று வருகிறார்களாம். அதிமுகவின் பவரை காட்ட இதுவே சரியான வழி என்று உள்ளூர் அதிமுக தலைகள் பலர் கருதுகிறார்களாம்.
இதனால் தீவிர அதிமுகவினர் நோட்டாவிற்கே வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளனராம். வார்டு அளவில் சிறு சிறு குழுக்களாக பிரிந்து.. அதிமுக இல்லாத இடத்தில் வேறு கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். நோட்டாவிற்கு வாக்களியுங்கள். அப்போதுதான் நம்முடைய பவர் தெரியும் என்று பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து பெரிய கட்சிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றன. பாஜக இதில் போட்டியிடவில்லை. அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல் தேமுதிகவும் போட்டியிடவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுதாக்கல் தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும். காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.
அதிமுக புறக்கணிப்பு:
இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துவிட்டது. இந்த ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் திமுக இந்த முறை போட்டியிடுகிறது. நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, வி.சி.சந்திரகுமார் (தி.மு.ககொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக ஈரோடு கிழக்கு ஏன் புறக்கணிப்பு:
2024 லோக்சபா தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த லோக்சபா தேர்தலோடு சேர்த்து 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், கடந்த லோக்சபா தேர்தல் என மொத்தம் 10 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. அது அனைத்திலும் தோல்வி அடைந்தது.
இந்த மோசமான தோல்வியடைந்தால் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று ஆகிவிடும் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications