புரிஞ்சுதா..உடனே வந்துடுவாரு எடப்பாடி பழனிசாமி.. அதைவிடுங்க, சசிகலா அப்படி சொன்னதுமே குழம்பிய ஓபிஎஸ்
சென்னை: ஓபிஎஸ் நடத்த போகும் மாநாட்டுக்கு தன்னை அழைத்தால், அதுகுறித்து யோசிப்பேன் என்று சசிகலா சொல்லி உள்ளநிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
திருச்சி மாநாட்டுக்கு, பிரிந்து போனவர்களுக்கும் ஓபிஎஸ் அழைக்க நினைக்கிறாராம்.. குறிப்பாக, மூத்த தலைவர்கள் கேசி பழனிசாமி, அன்வர்ராஜா, சசிகலா, உள்ளிட்டோரை அழைக்கும் விதமாகவும் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்..

ஆனால், ஓபிஎஸ் மாநாட்டில், டிடிவி தினகரன் பங்கேற்க மாட்டார் என்கிறார்கள். காரணம், ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டால், "சாதி முத்திரை" குத்தப்பட்டுவிடும் என்பதால், அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறாராம்..
நேற்று முன்தினம் ஓபிஎஸ் மாநாடு பற்றி டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஊடகங்கள் வாயிலாக தான் மாநாடு பற்றி தெரிந்து கொண்டேன் என்று கூலாக ஒரு பதில் சொன்னாரே தவிர, அதில் கலந்து கொள்வது பற்றி ஆதரவோ, மறுப்போ சொல்லவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது.
சாதி முத்திரை: ஆனால், சசிகலா இதில் நேரடியாக கலந்து கொள்வது சந்தேகம்தான் என்கிறார்கள்.. காரணம், ஓபிஎஸ்ஸுடன் இணைவதாக இருந்தால் எப்போதோ அவருடனான சந்திப்பை, சசிகலா நடத்தியிருக்கக்கூடும்.. ஓபிஎஸ் ஏப்போதுமே தன் தரப்பு ஆதரவாளர்தான் என்பதை சசிகலா அறியாமல் இல்லை.. ஆனால், சசிகலாவுக்கு சிக்கல் எடப்பாடி பழனிசாமி என்பதால், அவரை எப்படி வழிக்கு கொண்டுவருவது என்பதில்தான் திணறி வருகிறாராம்.. அதேசமயம், சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டுக்கு என்னை அழைத்தால், அது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்..
பொதுவான நபர் : அதாவது, சசிகலா அப்போது பேசும்போது, "ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் வழங்குவேன். மாநாட்டிற்கு அழைத்தால் அது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும். நீங்கள் ஓபிஎஸ்சை மட்டும் சொல்கிறீர்கள் . நான் பொதுவான கருத்தை சொல்கிறேன். நான் எல்லாருக்கும் பொதுவான நபர். எனக்கு இது சொந்த ஊர் அது சொந்த ஊர் என்று நினைத்தது கிடையாது. ஜாதியிலும் அப்படி நினைத்தது கிடையாது. அப்படி நினைத்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவரை நான் முதல்வராக கொண்டு வந்து இருக்க மாட்டேன். என்னுடைய வழி தனி வழியாகவே இருக்கும். நான் முதலிலில் இருந்தே அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறேன்" என்று சசிகலா கூறியிருந்தார்.
அதற்கேற்றவாறு, இந்த மாநாட்டில் சசிகலா கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று மூத்த தலைவர் புகழேந்தியும் இன்றைய தினம் கூறியுள்ளார். சசிகலாவுக்கு ஓபிஎஸ் மாநாட்டில் பங்கேற்க விருப்பம் உள்ளதாகவே தெரிகிறதாம்.. அதனால்தான், ஓபிஎஸ் அழைப்பு விடுத்தால், இதை பற்றி யோசிப்பேன் என்றும் அறிவித்திருந்தார்.. எனவே, ஓபிஎஸ் நேரில் வந்து அழைக்கும்போது, மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற முடிவில் தான் இருக்கிறாராம் சசிகலா.
பண்ருட்டி ராமச்சந்திரன்: இந்த நிலையில், சசிகலாவின் எண்ண ஓட்டங்களை அறிந்துள்ள ஓபிஎஸ், மாநாட்டில் பேச வேண்டிய விசயங்கள் குறித்து பண்ருட்டி ராமச்சந்திரனிடம் நேற்று முன்தினம் விவாதித்தபோது, சசிகலா-தினகரனை அழைப்பது குறித்தும் பேசியுள்ளார். அப்போது, சசிகலாவும் தினகரனும் மாநாட்டில் கலந்து கொண்டால், முக்குலத்தோர் கட்சியாக விமர்சனம் வரும். அதுவும், ஜெயக்குமாரை வைத்து சாதி ரீதியாக விமர்சிக்க வைப்பார் எடப்பாடி பழனிசாமி.. அதனால், சீர்தூக்கி பார்த்து சசிகலா, தினகரனை அழைப்பது குறித்து முடிவெடுங்கள்" என்று ஆலோசனை வழங்கினாராம் பண்ருட்டி ராமச்சந்திரன். இதனால் குழப்பமடைந்துள்ளார் ஓபிஎஸ் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications