ஹனுமனையே வட்டமாக சுற்றி வந்த விநோத நாய்.. 5 நாள் சாப்பிடல! கோயிலுக்குள் நடந்த ஆச்சரியம்! அமானுஷ்யம்
சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நந்த்பூர் கிராமம் கடந்த சில நாட்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.. இதற்கு காரணம் ஒரு நாய் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த நாய்க்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி நடந்து கொள்கிறது? என்ற குழப்பம் ஒருபுறமும், எல்லாம் தெய்வ செயல் என்று பரவசம் மறுபுறமும் சூழ்ந்துள்ளது.. உண்மையிலேயே என்ன நடந்தது உத்தரபிரதேசத்தில்?
நந்த்பூர் கிராமத்தில் உள்ள பழமையான ஒரு கோவிலில், ஒரு நாய் கடந்த ஐந்து நாட்களாக இடைவிடாமல் கோவிலையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது..

குறிப்பாக, ஹனுமான் மற்றும் துர்க்கை சிலைகளையே சுற்றி நடந்து கொண்டே இருந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த ஐந்து நாட்களிலும் அந்த நாய் சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை.
120 மணி நேரம் - 5 நாள் சாப்பிடல
120 மணி நேரம் தொடர்ந்து சுற்றி நடந்ததால், நாய் மிகவும் சோர்வடைந்தது. உடல் பலவீனம் தாங்க முடியாமல், ஒரே நேரத்தில் அது மயங்கி கீழே விழுந்தது. இதைப் பார்த்த மக்கள் பதறிப் போனார்கள். உடனே நாயை தூக்கி, ஒரு மெத்தையில் படுக்க வைத்து, போர்வையால் போர்த்தி பராமரிக்க ஆரம்பித்தனர்.
இந்த சம்பவம் காட்டு தீ போல அந்த பகுதி முழுக்க பரவிவிட்டது.. சோஷியல் மீடியாவிலும் வேகமாக பரவியது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் அந்த கோவிலுக்கு வர ஆரம்பித்தனர். பலர் அந்த நாயை "தெய்வ அருள் பெற்ற அதிசய நாய்" என்று நம்பி கும்பிட துவங்கிவிட்டார்கள்.. நாய்க்கு பிரசாதம், காணிக்கை வழங்கி, வணங்கினர்.. சிலர் இந்த நாயை பாபாவின் அவதாரம் என்கிறார்கள்...
தற்காலிக கடைகள்
இதனால் கூட்டம் அதிகரித்துவிட்டது.. கோவிலுக்கு வெளியே தற்காலிக கடைகளும் முளைத்தன. டீ கடை, பூ கடை, பிரசாத கடைகள் என அந்த கோவில் பகுதி ஒரு திருவிழா போல மாறிவிட்டது..
ஆனால் 5 நாட்கள் உணவு எதுவும் இல்லாமல் இருந்ததால், நாயின் உடல்நிலை மோசமானது. மக்கள் பால், ரொட்டி கொடுக்க முயன்றும், நாய் எதையும் சாப்பிட மறுத்தது. இதனால் கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
நாயைப் பரிசோதித்த டாக்டர் அஷ்வனி சித்ரான்ஸ், "பல நாட்களாக உணவு எடுத்துக்கொள்ளாததால், நாயின் உடலில் நீர்ச்சத்து மற்றும் சக்தி மிகவும் குறைந்துள்ளது. அதைக் காப்பாற்ற குளுக்கோஸ் மற்றும் மல்டி-வைட்டமின் சொட்டுகள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
டாக்டர்கள் சொல்வதென்ன
டாக்டர்கள் இதை ஒரு உடல்நலக் குறைபாடாகவே பார்க்கிறார்கள் என்றால், கிராம மக்கள் பலர் இதை இன்னும் தெய்வீக சம்பவமாகத்தான் நம்புகிறார்கள். நாய் கோவிலைச் சுற்றியது அதிசயம் என்றும், அதில் ஒரு மர்ம சக்தி இருப்பதாகவும் சலசலப்புகள் அதிகரித்துள்ளன...
ஆனால் விலங்குகளைப் பற்றித் தெரிந்தவர்கள் இதுகுறித்து பேசும்போது, "நாய் இப்படி தொடர்ந்து சுற்றி நடப்பது அதிசயம் இல்லை. நாய்க்கு உடம்பு சரியில்லாமையாலோ, மனதில் ஏதாவது பிரச்சனை இருந்தாலோ இப்படி நடக்கலாம்.
சில நேரங்களில் நாய்களுக்கு திடீர்னு அதிக சுறுசுறுப்பு வந்தால், வட்டம் வட்டமாக ஓடும்.. பார்ப்பதற்கு இது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனா இது சில நிமிஷம் தான் நடக்கும். இந்த மாதிரி மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்காது. சில நாய்களுக்கு பயம், மன அழுத்தம், சலிப்பு இருந்தாலும் ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்யும்.. அப்படியான நாய்கள் மணிநேரம் முழுக்க ஒரே இடத்தைச் சுற்றி நடக்கலாம்.
உடல்நல கோளாறு
முதிய நாய்களுக்கு மறதி வரவும் வாய்ப்பு இருக்கு. அப்படியான நாய்களுக்கு எப்போது நிறுத்தணும், எங்கே போகணும் என்று புரியாமல் தொடர்ந்து சுற்றிக்கிட்டே இருக்க வாய்ப்ண்டு.. அதேபோல நாயின் மூளையிலோ, காதிலோ ஏதாவது கோளாறு இருந்தாலும், நாய் ஒரே திசையில் நீண்ட நேரம் நடக்கலாம். இது சாதாரண விஷயம் இல்லை. உடனே மருத்துவர் பார்த்தால் தான் தெரியும்.
சில நேரங்களில் நாய் ஓடவும், விளையாடவும் வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும், மன உளைச்சலால் இப்படிச் சுற்றி நடக்கலாம். ஆனா அதோடு குழப்பம், பயம், அதிக மூச்சு வாங்குதல் இருந்தால் அது நோயின் அறிகுறியாகும்" என்கிறார்கள்...
ஆச்சரியம், அமானுஷ்யம், அதிசயம்
ஆனால், இதுபோல கோவிலைச் சுற்றி நடக்கும் நாய்கள் பற்றிய செய்திகள் முன்பும் வந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் உத்தரப் பிரதேசத்திலும், கர்நாடகாவிலும் இதே மாதிரி சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போதும் மக்கள் அதிசயம் என்று நினைத்தார்கள்.
மொத்தத்தில் , இந்த உத்தரபிரதேச சம்பவத்தை அதிசயம் என்று சொல்வது ஒருபுறம் இருந்தாலும், அந்த நாய்க்கு உடம்பு சரியா இருக்கிறதா என்று கவனிப்பது தான் முக்கியம். அந்த நாயை மருத்துவர் பார்த்து பரிசோதித்தால் தான் உண்மை காரணம் தெரியும். நம்பிக்கையை விட, அந்த நாயின் உயிரும் நலனும் தான் முதலில் பார்க்க வேண்டியது...!!!












Click it and Unblock the Notifications