‘கமல், சிரஞ்சீவியை விடுங்க.. விஜயை சாதாரணமா நினைக்காதீங்க’ – பிரபல சினிமா இயக்குநர் கருத்து
சென்னை: தவெக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார். திருப்பம் தர வேண்டும் என்பதற்காக திருச்சியில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ளார். விஜய் திமுகவை நேரடியாக விமர்சித்தாலும், அவரின் குறிவைப்பது அதிமுகவின் இடத்திற்கு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு மக்கள் கூடியது அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. பிரபல திரைப்பட இயக்குநர் சுப்ரமணியம் சிவா விஜய்யை சாதாரணமாக நினைக்காதீர்கள் என்று மற்ற அரசியல் கட்சிகளுக்கு தன்னுடைய கள அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. வழக்கம் போல திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி களத்தில் நிற்க நடிகர் விஜய்யின் தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களம் காண்கின்றன. இதில் விஜய் அரசியல் சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

விஜய் அரசியல்
விசிக தலைவர் திருமாவளவன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் விஜய் தாக்கம் இருக்கும். தவெக கணிசமான வாக்குகளை பெறும் என்று கூறியுள்ளனர். வெற்றி, தோல்வியை முடிவு செய்யும் இடத்தில் தவெக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் விஜய் வருகையால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என்று திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் நேற்று முதல் திருச்சியில் இருந்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். ஒவ்வொரு சனிக்கிழமை வீதம் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். நேற்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. மக்கள் தன்னெழுச்சியாக கூடி விஜயை பார்ப்பதற்காக நள்ளிரவு வரை காத்திருந்தனர். அதிக கூட்டத்தால் வாகனம் நகர முடியாமல் பெரம்பலூர் பயணம் ரத்து செய்யப்பட்டது.
சாதாரணமா நினைக்காதீங்க
விஜயின் இந்தப் பயணம் தான் அரசியலில் டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்கள். திருடா திருடி, சீடன், பொறி, யோகி, வெள்ளை யானை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா. இவர் தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் சினிமா, அரசியல் குறித்து பரபரப்பான பதிவுகளை வெளியிடுவார்.
இதுகுறித்து இயக்குநர் சுப்ரமணியம் சிவா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் இன்றும் சொல்வது இதைத்தான், பல ஊர்கள் சென்று வருவதால் சொல்கிறேன். இதை எதார்த்த அரசியல் புரிந்தவர்களும், நடுநிலை அரசியலில் உள்ளவர்களும் உணர்வார்கள் என நம்புகிறேன். வரலாற்றின் வேலை துணிந்தவனை தலைவனாக்குவது தான். எனவே தவெக விஜயை சாதாரணமாக நினைக்காதீர்கள்.
விஜய் வரவு.. அரசியலில் அதிர்வு
மேலும் சிரஞ்சீவி தோற்றார், கமல் தோற்றார் என்ற கற்பனை வாதத்தை முன்வைக்காதீர்கள். அவர்கள் அரசியலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து விட்டார்கள் என்பது மேம்போக்கான அரசியல் உணர்ந்தவர்களுக்கு மற்றும் உணர்ச்சி மயமான ஒருதலை அரசியல் நிலைபாடு உள்ளவர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை. எனவே, மீண்டும் சொல்கிறேன் விஜய் வரவு அரசியலில் ஒரு அதிர்வு என்பதே உண்மை. இது என் தனிப்பட்ட அரசியல் பதிவு." என்று கூறியுள்ளார். அவரின் பதிவு வைரலாக பரவி வருகிறது.
இந்தப் பதிவை தவெகவினர் வரவேற்று வருகிறார்கள். அதேநேரத்தில் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் சுப்ரமணியம் சிவா பதிவுக்கு எதிர்வினையாற்றி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications