சேட்டை புடிச்ச பையன் சார் ட்ரம்பு! ஒரே ஒரு வீடியோ தான்! ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் பத்திக்கிச்சு!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த ஒரு வீடியோ பதிவு அமெரிக்க அரசியல் வட்டாரத்திலும், சர்வதேச சமூக ஊடகங்களிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், போரட்டக்காரர்கள் மீது அரசு உடையுடன் இருக்கும் ட்ரம்ப் விமானத்தில் இருந்து கழிவுகளை வீசுவது போல ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கைகள், பொருளாதார முடிவுகள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மியாமி, லாஸ் ஏஞ்சலீஸ், நியூயார்க், வாஷிங்டன், சிகாக்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் சாலைகளில் இறங்கி, "இது ஜனநாயக நாடு, மன்னராட்சி அல்ல" என்று முழக்கம் எழுப்பினர்.
சனிக்கிழமை காலை நியூயார்க்கின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். டிரம்ப் எங்கள் குரலைக் கேளுங்கள்", "நாடு நம் கையில், அரசர் யாரும் இல்லை" போன்ற பதாகைகளுடன் இந்த போராட்டம் நடைபெற்றது.

டொனால்ட் டிரம்ப்
சுமார் 70 லட்சம் மக்கள் பல்வேறு மாகாணங்களில் ஒரே நேரத்தில் சாலைகளில் இறங்கி, டிரம்ப் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கு மீது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இத்தகைய சூழ்நிலையில், டிரம்ப் தனது "ட்ரூத் சோஷியல் (Truth Social)" என்ற சமூக ஊடக தளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "அரசர் டிரம்ப்" என்ற தலைப்புடன், அவர் போர் விமானத்தின் பைலட்டாக கிரீடம் அணிந்து அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா போராட்டம்
வீடியோவில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே, தரையில் போராட்டம் நடத்தும் மக்கள்மீது கழிவுகள் வீசும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அந்த காட்சிகளுடன் "Danger Zone" என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. இந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதில் காணப்படும் காட்சிகள் அவரது அரசியல் எதிரிகளை அவமதிப்பதாகவும், பொதுமக்கள் எதிர்ப்பை கேலி செய்வதாகவும் சமூக ஊடக பயனாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏஐ வீடியோ
வீடியோ வெளிவந்த சில மணி நேரங்களிலேயே, #TrumpVideo என்ற ஹாஷ்டேக் அமெரிக்காவில் ட்ரெண்டிங் ஆனது. முன்னாள் அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஊடக பிரபலர்கள் என பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டம் ஜனநாயகத்தின் உயிர், அதைக் கேலி செய்வது அதிபர் நிலைக்கு ஒவ்வாத செயல் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம், டிரம்பின் ஆதரவாளர்கள் இது ஒரு நகைச்சுவை வீடியோ மட்டுமே; எதிரிகள் அதை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்று கூறி அவரை ஆதரிக்கிறார்கள்.
சர்வதேச விமர்சனம்
இந்த வீடியோ டிரம்ப் அரசியல் பாணியைச் சரியாக பிரதிபலிக்கிறது எனவும், நையாண்டி, மக்களிடையே பிளவை உண்டாக்குதோடு, அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகம் தரும் பிரசார உத்தியாகவும் மாறியுள்ளது என்கிறார்கள் அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள். இந்நிலையில், பல மனித உரிமை அமைப்புகள், "அதிபர் பதவியில் இருப்பவர் மக்கள் மீது கழிவு வீசும் காட்சிகளைப் பகிர்வது ஆபாசமான அரசியல் செய்தி" எனக் கூறி, அந்த வீடியோவை நீக்க கோரியுள்ளன. தற்போது இந்த வீடியோ விவகாரம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications