எய்ட்ஸ் தீயாய் பரவும்.. பல லட்சம் பேர் சாகப்போகிறார்கள்! டிரம்ப் முடிவால் வந்த சிக்கல்! ஐநா வார்னிங்
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த ஒரு நடவடிக்கையின் விளைவாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது, உலகளவில் பல மரணங்களுக்கு காரணமாகலாம் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவால் எய்ட்ஸ் நோயால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா.வின் நோய்க்கான திட்டக்குழு எச்சரித்துள்ளது. எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான அறக்கட்டளையின் (amfAR) ஆய்வின்படி, அமெரிக்காவின் இந்த நிதி உதவியால் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் 2,70,000 பேர் பணியமர்த்தப்பட்டு எய்ட்ஸ் நோய்க்கு எதிராக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அமெரிக்கா தற்போது இந்த நிதியை நிறுத்தியுள்ளதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6.3 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் இறக்க நேரிடலாம் என்றும், 87 லட்சம் பேர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் நிதி உதவி
அமெரிக்கா வழக்கமாக உலக நாடுகளுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக நிதி உதவி அளித்து வருகிறது. இது சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதி என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதியை முடக்கும் முடிவை எடுத்துள்ளார். இதன் காரணமாக அமெரிக்கா எந்தவொரு நாட்டிற்கும் நிதி உதவி வழங்காது. இதனால், இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற்று வந்த நிதியும் பாதிக்கப்படும். சுகாதாரம் மற்றும் பிற திட்டங்கள் தொடர்பாக இந்தியா பெற்று வந்த நிதி முடக்கப்படுவதால் பல திட்டங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவில் அமெரிக்க நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், சில அரசு செயல்பாடுகள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. USAID எனப்படும் இந்த நிதி நிறுத்தப்பட்டதால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தியாவிற்கான USAID நிதி
இந்தியாவில் பணிபுரியும் அதன் ஒப்பந்த திட்டங்களை நிறுத்துமாறு USAID அறிவுறுத்தியுள்ளது. USAID இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், USAID மூலம் இந்தியா $140 மில்லியன் பெற உள்ளது. கடந்த ஆண்டும் இதே தொகையைப் பெற்றது. இந்த நிதி முழுவதையும் இந்தியா இழக்கும். அதாவது, சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை இந்தியா இழக்க நேரிடும்.
2023-24 நிதியாண்டில், USAID ஒதுக்கீடு மூலம் இந்தியாவின் அரசு மற்றும் சிவில் சமூகத் திட்டங்களுக்கு $6.8 மில்லியன், சுகாதாரத்திற்காக சுமார் $55 மில்லியன், சுற்றுச்சூழலுக்கு $18 மில்லியன் மற்றும் சமூக உள்கட்டமைப்புக்கு $7.8 மில்லியன் என ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடு அப்படியே முடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அமெரிக்காவின் நிதி உதவி இந்தியாவில் சுகாதார திட்டங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது.
1990 முதல், USAID திட்டங்கள் இந்தியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளன. மேலும், 25,000 நிமோனியா இறப்புகள் மற்றும் 14,000 வயிற்றுப்போக்கு இறப்புகள் USAID நிதி மூலம் தடுக்கப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
காசநோயை சிறப்பாகக் கண்டறியவும், குணப்படுத்தவும் மற்றும் தடுக்கவும் USAID இந்திய அரசுக்கு சிறப்பு நிதிகளை வழங்கி உள்ளது. இதன் மூலம் இந்தியா காசநோயை தடுக்க உதவியது. தற்போது இந்த நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. எச்.ஐ.வி ஆபத்தில் உள்ள மக்களைத் தடுப்பதற்கும் பராமரிப்பதற்கும் கூட இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தியாவில் 2007ஆம் ஆண்டிலிருந்து எய்ட்ஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை 32 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு அமெரிக்காவின் நிதியே முக்கிய காரணம்.












Click it and Unblock the Notifications