அஸ்திவாரத்தையே ஆட்டும் டிரம்ப்? தடுமாறும் அமெரிக்கா.. யோசிக்க முடியாத ரேட்டுக்கு எகிற போகுது தங்கம்
சென்னை: சர்வதேச அளவில் நடக்கும் சிறு சிறு மாற்றங்கள் கூட தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத ஒரு விஷயத்தை டிரம்ப் நிர்வாகம் செய்திருக்கிறது. இது அங்குப் பெரும் விவாதமாக மாறியிருக்கும் நிலையில், தங்கம் விலையும் இதனால் உச்சம் தொடப் பிரகாசமாக வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் தங்கம் என்பது ஆபரணம் என்பதைத் தாண்டி முதலீடாகப் பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தைத் தாண்டி செல்வத்தைச் சேகரிக்கத் தங்கத்தையே இந்தியர்கள் முதலீடாகப் பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் தங்கத்தை வாங்கி வைப்பார்கள். பல குடும்பங்கள் தங்கள் பிரதானச் சேமிப்பாகக் கூட தங்கத்தையே வைத்திருக்கிறார்கள்.

தங்கம்
அதேநேரம் தங்கம் என்பது சர்வதேச அளவில் சேமிக்கப்படும் ஒரு உலோகம். உலக நாடுகள் கூட தங்கத்தை வாங்கி வைக்கும். இதனால் உலகில் எங்காவது நடக்கும் சிறு சிறு மாற்றங்கள் கூட தங்கம் விலையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கிடையே அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள சில நடவடிக்கைகள் மிகப் பெரிதாக வெடித்துள்ளது.
அஸ்திவாரத்தை ஆட்டும் டிரம்ப்
அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் அந்நாட்டின் பெடரல் வங்கி கவர்னருக்கும் டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே நேரடியாகவே மோதல் வெடித்துள்ளது. பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவலுக்கு எதிராக அந்நாட்டு அரசு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெடரல் வங்கி கட்டிடங்களைப் புதுப்பிக்கும் பணிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அமெரிக்க நீதித்துறை பவலுக்கு விசாரணையை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யப்போவதாக மிரட்டியுள்ளது.
அதேநேரம் பவல் தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது ஒரு திட்டமிடப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று பவல் கூறுகிறார். வட்டி விகிதங்களைக் குறைக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுப்பதாகவும் அதை ஏற்க மறுப்பதாலேயே தன் மீது இப்படிக் குற்றவியல் விசாரணையைத் தொடங்குவதாகவும் பவல் தெரிவித்துள்ளார். தன்னை பணிய வைக்கவே கட்டிட விவகாரத்தை ஒரு காரணமாக அரசு பயன்படுத்துவதாகக் கூறிய பவுல், விசாரணையை எதிர்கொள்ளத் தயார் எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
நடந்ததே இல்லை
பெடரல் வங்கியின் சுதந்திரம் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் 1980களுக்கு பிறகு அமெரிக்க பெடலர் கவர்னருக்கும் ஆளும் அரசுக்கும் இடையே இவ்வளவு பெரிய மோதல் ஏற்படுவது இதுவே முதல்முறை. இது அங்கு நிச்சயமற்ற ஒரு தன்மையை உருவாக்கியுள்ளது. பொதுவாக இதுபோல நிச்சயமற்ற தன்மை உருவாகும்போது, அது தங்கத்திற்குச் சாதகமாக அமையும்! இப்போதும் அதுவே தான் நடக்கிறது.
உலக அரசியல்
அடுத்தது புவிசார் அரசியல் பதற்றம். டிரம்ப் ஒரு பக்கம் தடாலடியாக வெனிசுலாவில் இறங்கி அந்நாட்டின் அதிபரைக் கைது செய்து நாடுகடத்த உத்தரவிடுகிறார். இன்னொரு பக்கம் ரஷ்யக் கொடியுடன் இருந்த கப்பலைப் பிடிக்க உத்தரவிடுகிறார். இதுபோக கொலம்பியா, கிரீன்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும் டிரம்ப் ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் என்ற தகவல்களும் கசிந்துள்ளன.
அதிலும் குறிப்பாக ஈரானில் அமெரிக்க ராணுவம் களமிறக்கப்பட வாய்ப்புகள் மிக அதிகம் என்றே சொல்லப்படுகிறது. அப்படி ஒருவேளை நடந்தால் சர்வதேச அரசியல் மோசமாகும். இதுபோன்ற புவிசார் குழப்பங்களும் தங்கம் விலை அதிகரிக்கவே காரணமாக அமையும். யாரும் துளியும் எதிர்பார்க்காத ரூட்டில் டிரம்ப் பயணிக்கும் நிலையில், அதுவே தங்கம் விலை உச்சத்திற்குப் போகப் பிரதானக் காரணமாக இருக்கிறது. வரும் நாட்களிலும் இந்த குழப்பம் தொடரும். தங்கம் விலை ஏற்றமும் தொடரும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications