குரூப் 4-ல் கூட தேர்ச்சி பெற முடியாத உதயநிதி.. மாணவர்களை முட்டாளாக்க நினைக்க வேண்டாம்.. அண்ணாமலை
சென்னை: குரூப் 4 தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத உதயநிதி ஸ்டாலின், தமிழக மாணவர்களை முட்டாளாக்க நினைக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு இல்லை என்றும் குரூப் 4 தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத உதயநிதி , தமிழக மாணவர்களை முட்டாளாக்க நினைக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், 2021ஆம் ஆண்டு கரூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களான செங்குளம் பள்ளி மாணவர் சின்னத்துரை, தோகைமலை பள்ளி மாணவர் சிவகணேசன், கடவூர் பள்ளி மாணவி ஆர்த்தி, சின்னதாராபுரம் பள்ளி மாணவி அகல்திகா, குளித்தலை பள்ளி மாணவி நர்மதா ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு முதலிடத்தை பிடித்த கரூர் மாணவர் பிரபு வெகு விரைவில் மருத்துவராகவுள்ளார்.

திமுகவினரே கையெழுத்து இடவில்லை: ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக, 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து வாங்கப்போறேன் என்று கிளம்பியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மக்கள் ஆதரவு இல்லாததால், அவரால் 14 நாட்களில் 3 லட்சம் கையெழுத்து கூடப் பெற முடியவில்லை. திமுகவினரே கையெழுத்து இடவில்லை. உதயநிதிக்கு நீட் தேர்வு தேர்ச்சி பெறுவது பற்றி சந்தேங்கங்கள் இருந்தால் எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
குரூப் 4 தேர்வில் கூட: அதை விட்டுவிட்டு, பள்ளி மாணவர்களிடம் சென்று தற்கொலை பற்றி பேசுவது, பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து கையெழுத்து இடச்சொல்வது போன்ற கீழ்த்தரமான அரசியலை உதயநிதி கைவிடவேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத உதயநிதி, தமிழக மாணவர்களை முட்டாளாக்க நினைக்க வேண்டாம்.
கம்பி எண்ணுகிறார்: கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் செந்தில் பாலாஜி, 2019 ஆம் ஆண்டு, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றால் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம், இலவச வீடு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். கரூர் கம்பெனி என்ற ஒரு மாஃபியா நிறுவனத்தை நடத்தி, கரூருக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்தவர் ஊழல் பாலாஜி. இன்று ஊழல் செய்த வழக்கில் புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
ஊழல் அரசு: அவர், 11 மணிக்கு ஆட்சிக்கு வந்ததும் 11:05 க்கு மணல் அள்ளலாம். தடுக்கும் அதிகாரி இருக்க மாட்டார் என்று பேசியதன் விளைவு, இன்றும் மணல் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர். தங்கள் கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகள் மீதும் சமூக அக்கறைக் கொண்ட பொதுமக்களின் மீதும், தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. இதனைத் தடுக்கக் கையாலாகாமல் இருக்கிறது ஊழல் திமுக அரசு.
காவிரி நீர் திறக்க மறுத்த கர்நாடக அரசுக்கு எதிராகவோ, மு.க ஸ்டாலினுக்கு எதிராகவோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விவசாயிகள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், தேர்தல் நெருங்கி விட்டதால் போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார். கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலை முன் நின்று அரங்கேற்றியது கரூர் மேயர் கவிதா தான்.
ரூ.25 லட்சம் அபராதம்: ஆனால் இந்த வழக்கில் அவர் மீது காவல்துறை எந்த வழக்கும் பதியவில்லை. மேயராக இவர் செய்த சாதனைகள், மாநகராட்சி அலுவலகத்துக்கு 25 லட்ச ரூபாய்க்கு பேனா, பென்சில், பேப்பர் போன்ற எழுதுபொருட்கள் வாங்கியது, திருமாநிலையூர் பகுதியில் சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறாமல் பேருந்து நிலையம் கட்ட தொடங்கியதால் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கரூர் மாநகராட்சிக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.
இவை மட்டும் தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஊழல் மிகுந்த மக்கள் விரோத திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். பிரதமர் மோடி நல்லாட்சி தொடர, பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம்" இவ்வாறு அண்ணாமலை ட்வீட் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications