குழந்தையின்மையை தரும் PCODயால் அவதியா?.. சிகிச்சை முறைகளை சொல்கிறார் டாக்டர் பரூக் அப்துல்லா
சென்னை: பெண்களே சினைப் பை கட்டிகளால் அவதிப்படுகிறீர்களா , உங்களுக்கான தீர்வை சொல்கிறார் டாக்டர் பரூக் அப்துல்லா.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: தன் வாழ்வின் நான்காவது எட்டை இன்னும் சில மாதங்களில் நிறைவு செய்ய உள்ள சகோதரி ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார். அவரது முக்கிய பிரச்சனை ராப்பொழுதுதனில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்வதாகவும் இதனால் உறக்கம் கெடுவதும் தான். இரவில் அடிக்கடி சிறுநீர் என்றவுடன் கிளினிக்கில் இருக்கும் ரத்த சர்க்கரை அளவுமானியில் (Glucometer) சோதித்ததில் ரத்த சர்க்கரை 250க்கு மேல் இருக்கவே... மீண்டும் காலை வெறும் வயிற்றில் உணவுக்குப்பின் இரண்டு மணி நேர ரத்த சர்க்கரை அளவுகள் பரிசோதனை செய்து இரண்டும் முறையே 125 mg/dl மற்றும் 200mg/dl க்கு மேல் இருந்தமையால் டைப் டூ டயாபடிஸ் ( இன்சுலின் சுரப்பில் சிக்கல் இல்லை; மாறாக இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் எனும் சுரக்கப்பட்ட இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் இருப்பது) என்று நோய் கண்டறியப்பட்டது.

அதற்கு சிச்சையாக
✅மாவுச்சத்தை குறைத்து உண்ணும் உணவு முறை அட்டவணையும்
✅ தினசரி ஒரு மணிநேரம் மிதவேக நடை
கூடவே உடலில் சுரக்கும் இன்சுலினை நன்றாக வேலை செய்யப்பணிக்கும் "மெட்பார்மின்"(Metformin) எனும் மாத்திரையை பரிந்துரைத்தேன்
Metformin இல் பல நல்ல விசயங்கள் உண்டு
- அத்தனை எளிதாக லோ சுகர் எனும் Hypoglycemia வராது.
- உடல் எடை குறைப்பதில் பங்கெடுக்கும்
-இன்சுலினை சுரக்கத் தூண்டாது. ஆனால் உடலில் இருக்கும் இன்சுலினை நன்றாக வேலை செய்ய வைக்கும். இதை Insulin Sensitiser என்று கூறுவோம். இதனால் உடல் எடை கூடுவது போன்ற விளைவுகள் நேராது.
-பல ஆய்வுகளில் பெரு, சிறு, நுண்ணிய ரத்த நாளங்களில் அடைப்புகள்,உள்காயங்களால் ஏற்படுவதை தடுக்கின்றது என்றும் முடிவுகள் வந்துள்ள ஒரு மாத்திரை
- பசியின்மையை உண்டு செய்து அடிக்கடி உண்பதை குறைக்கும். இதனால் நொறுக்குத் தீனி கொறிக்கும் ஆவல் குறையும்.
( குமட்டல் / வயிற்று வலி / உப்புசம்/ ஏப்பம் / சுவைத்தல் திறனில் சிறிது மாற்றம் போன்ற விரும்பத்தகாத விசயங்களும் உண்டு. எனினும் வெகு சிலருக்கே இந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் வருகின்றன. பெரும்பான்மையினருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை) அந்த மாத்திரையை காலையும் இரவும் இரண்டு வேளையாக பரிந்துரை செய்தேன்.

இந்த சிகிச்சையில் இருந்தவர் அடுத்த சில மாதங்கள் சரியாக சிகிச்சைக்கு வந்தார். பிறகு பல மாதங்கள் கிளினிக் வரவில்லை அதன்பின் ஒருநாள் வந்தார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதனால் தான் முறையாக ரிவியூ வர இயலவில்லை என்று கூறினார் . அவர் கூறினார்.. "எனக்கு முதல் குழந்தை பிறந்த எட்டு வருடங்கள் முடிஞ்சிருச்சு சார். ரெண்டாவது குழந்தைக்கு ரெண்டு தடவ நின்னு அபார்சன் ஆயிடுச்சு.. நாங்களே இப்ப அதப்பத்தி மறந்துட்டோம்.. ஆனா இப்ப ஆண்டவன் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்துருக்கான் சார்"
"வாழ்த்துகள் மா.. ரொம்ப சந்தோசம்"
"இல்ல சார்.. எனக்கு ஒரு டவுட். எனக்கு டயாபடிஸ் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி வர சரியாவே பீரியட்ஸ் வராது. இர்ரெகுலரா இருக்கும். ஆனா டயாபடிஸ்க்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்ச சில மாதங்கள்ல ஒழுங்கா ஆயிடுச்சு. அதுக்கு அடுத்து கன்சீவ் ஆயிட்டேன். இது எப்படி?? சொல்லுங்க சார்"

"மா.. உங்களுக்கு டைப் டூ டயாபடிஸ் இருந்தது மட்டும் தான் உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆனால் உங்களுக்கு PCOD எனும் சினைப்பை நீர்க்கட்டி நோயும் இருந்துருக்குது. டயாபடிஸும் PCODஉம் இரண்டுக்கும் ஒரே காரணம் தான். இன்சுலின் சரியா வேலை செய்யாம முரண்டு புடிக்கிறது. உங்களுக்கு டயாபடிஸ் கண்டுபிடிக்கப்பட்டு உணவில் மாவுச்சத்தை குறைச்சோம்.
டெய்லி நடக்க சொன்னோம் கூடவே மெட்பார்மின்* ரெண்டு வேளை கொடுத்தோம்.. நீங்க எடை குறைஞ்சீங்க..
டயாபடிஸ் கண்ட்ரோல்க்கு வந்துச்சு. அது கூடவே இந்த PCODஉம் கண்ட்ரோல் ஆகியிருக்கு. இது நம்ம ரெண்டு பேருக்குமே தெரியாது.
இதற்கு பெயர் தான் "மறைமுக அருள்- பரக்கத்*.. வாழ்த்துகள்.." என்னைப் பொறுத்தவரை
PCODஐ கட்டுப்படுத்தும் வெற்றிகரமான வழிகள்
குறை மாவு உணவு முறை
+
உடல் பயிற்சி
+
மகப்பேறு மருத்துவரின் சிகிச்சை
+
வாழ்க்கை துணையின் & குடும்பத்தின் அன்பு

PCODயினால் துன்பங்களை சந்தித்து வரும் சகோதரிகளுக்காக இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன். டைப் டூ டயாபடிஸ் வந்தாலும் அது வாழ்க்கையின் முடிவன்று எளிதான உணவு முறை மாற்றங்கள் + உடற்பயிற்சி + மருத்துவர் பரிந்துரையில் மருந்துகள் கொண்டு அதைக் கட்டுப்படுத்தலாம். ஒரு உண்மை கூறுகிறேன் . நீரிழிவு என்று கண்டறியப்பட்டு அதை நன்றாக கண்ட்ரோலில் வைத்து இருப்பவர்கள் சராசரி மக்களை விட நன்றாக சிறந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள் . எதையும் பாசிடிவாக அணுகி ஆக்கப்பூர்வமான அறிவியல்பூர்வமான மாற்றங்களை வாழ்க்கையில் செய்தால் நிச்சயம் வெற்றி தான். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications