Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று ’நீட்’ ஆதரவு; இன்று எதிர்ப்பு! கிருஷ்ணசாமி பல்டி! அனிதா மரணம் பற்றி சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வை நடத்தி வரும் தேசிய தேர்வு முகமை அமைப்பைக் கலைக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார். நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த போது தமிழ்நாட்டை உலுக்கக் கூட அளவுக்கு நடந்த அனிதாவின் மரணத்தைப் பற்றி கூட சந்தேகம் எழுப்பிய கிருஷ்ணசாமி, இப்போது பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு நீட் தேர்வை நடத்தி வரும் அமைப்பையே கலைக்க வேண்டும் என அப்படியே மாற்றிப் பேசி உள்ளார்.

பாஜக அரசு நீட் தேர்வை நடைமுறைப்படுத்திய போது அதை முதலில் எதிர்த்த மாநிலம் தமிழ்நாடு. குறிப்பாக திமுக அந்தத் தேர்வுக்கு மிகக்கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அனிதாவின் மரணத்திற்குப் பின்னர் அந்தத் தேர்வு முறையே இருக்கக் கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்.

Dr Krishnasamy NEET

திமுக அனிதாவின் மரணத்தை முன்வைத்து நீட் தேர்வை தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தே தீர்வோம் என்று வாக்குறுதி அளித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போதுகூட ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராகத்தான் இருக்கும் என்ற வாக்குறுதியை உதயநிதி அளித்திருந்தார்.

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக முதல் கையெழுத்துப் போடவில்லை. ஆகவே அதை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வருகின்றன. ஆனால், நீட் விலக்கு கேட்டு சட்டப்பேரவையில் 2 முறை மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கையெழுத்துப் போடாமல் ஆளுநர் அமைதி காத்து வந்தார். அதைவைத்து நீதி மன்றம் சென்றது தமிழ்நாடு அரசு. அதில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் மசோதா குறித்து உடனடி முடிவு எடுக்கப்பட்ட வேண்டும் என்று ஆளுநரை நீதிமன்றம் அறிவுறுத்தியது. இப்படி இந்த விவகாரம் முடிவே இல்லாத தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில்தான் இதுவரை நீட் தேர்வு குறித்து ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வந்த டாக்டர் கிருஷ்ணசாமி, இப்போது அந்தத் தேர்வை நடத்தும் அமைப்பையே கலைக்க வேண்டும் எனக் கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார். இது பற்றி டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், "கடந்த மே மாதத்தில் இந்தியா முழுக்க ஏறக்குறைய 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருந்தார்கள். எப்போது இல்லாத அளவுக்கு இந்த முறைகேடுகள் நடந்துள்ளதாக மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

குறிப்பாக டெல்லி, பீகார், உபி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்தத் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த அமைப்புக்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதா? நாடாளுமன்ற சட்டத்தின் மூலமாக இது உருவாக்கப்படவில்லை. இதை வெறும் அறக்கட்டளை போல பதிவு செய்துள்ளார்கள். யுபிஎஸ்சியைப் போல இந்த அமைப்பு வலுவான நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் தேசிய தேர்வு முகமை அமைப்பு உருவாக்கப்படவில்லை.

ஆகவே இந்த அமைப்பை உடனடியாக கலைக்கவேண்டும். கோடிக்கணக்கான மாணவர்களில் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய இந்த அமைப்பு சட்டப்படி அமைக்கப்பட வேண்டும். அதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. 'நீட்' தேர்வு நடைமுறைக்கு வந்தபோது அதை ஆதரித்தவன் நான். தனியார் கல்லூரிகள் நிறைய வந்தபிறகு மதிப்பீடு செய்வதில் ஒரு தரம் இல்லாமல் இருந்தது. வெறும் பணத்தைப் பெற்றுக்கொண்டு மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ சீட்டு வழங்கப்பட்டு வந்ததால், இப்படியான ஒரு தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுவது நல்லது என நினைத்தேன்.

ஈரோடு, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்கள் மோழிப் பண்ணைகளில் அடைத்து வைத்து விடிய விடிய அவர்களைப் படிக்கச் சொல்லி டார்ச்சர் செய்து மதிப்பெண்களைப் பெற்று மருத்துவ படிப்பில் சேரக்கூடிய ஒரு அவலம் தமிழ்நாட்டில் நடந்து வந்தது. அதை ஒழிக்கவே நாங்கள் நீட் தேர்வை ஆதரித்தோம். ஆனால், இப்போது அதைவிடக் கொடுமையான முறைகேடுகள் நடந்து வருகின்றன.

நாடு முழுவதும் புற்றீசல்களைப் போல தனியார் பயிற்சி மையங்கள் நிறைய தோன்றி வருகின்றன. அதைவைத்து மருத்துவத்தை வணிகமயமாக்கி வருகிறார்கள். ஆகவே தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் புகைப்படங்களைப் பயிற்சி மையங்கள் வெளியிடுவதைத் தடை செய்வதற்குத் தனியாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதன் மூலம் அது தடுக்கப்பட்ட வேண்டும்" என்று பேசி இருக்கிறார்.

இதே கிருஷ்ணசாமி பாஜக கூட்டணியிலிருந்தபோது கடந்த ஆறு ஆண்டுகள் முன்பாக நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று கூறியிருந்தார். கட்டாயம் நீட் தேர்வு வேண்டும் என வாதிட்டிருந்தார். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு அவசரச் சட்டம் இயற்றி இருந்தபோது இவர் இவ்வாறு பேசி இருந்தார். அந்த நேரத்தில் அவசரச் சட்டம் கொண்டுவந்தால் நாங்கள் உதவத் தயார் என்று மத்திய அமைச்சர்கள் கூறி இருந்தார்கள். அதன் அடிப்படையில் இச்சட்டத்தை தமிழக அரசு இயற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. அந்நேரத்தில் அதற்கு கடும் கண்டனத்தை கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார்.

அதேபோல கடந்த 2017இல் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களைப் போராட்டத்திற்குத் தேச விரோச சக்திகள் தூண்டு விடுவதாக தெரிவித்திருந்தார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்தக் கருத்தை அவர் கூறியிருந்தார். மேலும் போட்டித் தேர்வில் பங்கேற்க முடியாத அளவுக்குத் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வித் தரம் குறைந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய தேசவிரோத கும்பல்தான் நீட் தேர்வுக்குப் போராடி வருகிறது என்று அவர் பேசியிருந்தார். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காகக் கடந்த 10 மாதங்கள் முன்னதாக அனுப்பி வைத்தது திமுக அரசு. அப்போது பேசிய கிருஷ்ணசாமி ஒருபோதும் ஆளுநரைக் கையெழுத்திட அனுமதிக்கமாட்டேன் என்று ஆவேசமாகக் கூறியிருந்தார். பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்தது முதல் திராவிட சித்தாந்தத்தையும் நீட் தேர்வையும் அவர் மிகக்கடுமையாக விமர்சித்து வந்தார்.

ஒருமுறை தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது மிகப்பெரிய கலவரமாக மாறியது. அந்தப் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது. மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது, 'மருத்துவத்தைத் தவிர வேறு படிப்பே இல்லையா?' என்று விதண்டாவாதமாக ஒரு கேள்வியை எழுப்பினார்.

இதை எல்லாம் தாண்டி அனிதாவின் மரணம் நிகழ்ந்த போது திமுக உள்ளிட்ட பல கட்சிகள் போராடின. நீட் விலக்கு கேட்டு முறையிட்டன. அப்போதுகூட டாக்டர் கிருஷ்ணசாமி, 'அனிதாவின் மரணத்திற்கு நீட் தேர்வு மட்டுமே காரணமா?' என்று மிக மோசமாகப் பேசினார். நாடே அந்த மரணத்தைப் பற்றி கவலை கொண்டபோது, அவர் அதை மிகத் துச்சமாகக் கடந்து போய் இருந்தார்.

ஆனால், பாஜக கூட்டணியிலிருந்த வெளியே வந்த பிறகு இப்போது நீட் வேண்டாம் என்றும் நாடு முழுவதும் பல மாநிலங்களில் மாணவர்கள் போராடுகிறார்கள் என்று அதற்குக் காரணம் காட்டி பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் மாணவர்கள் நீட் எதிர்த்துப் போராடினால் அது தேச விரோத சக்திகளின் தூண்டுதல் என்ற கிருஷ்ணசாமி, இப்போது வேறு மாநிலங்களில் நடக்கும் மாணவ போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். அந்தப் போராட்டங்கள் தேச விரோத சக்திகளால் தூண்டப்படவில்லையா என்ற கேள்வி தானாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+