அதிமுகவை பாஜக மேலிடம் விடமாட்டாங்க! எனக்கு கிடைத்த தகவல் படி..! சீக்ரெட்டை பகிர்ந்த கிருஷ்ணசாமி!
சென்னை: அதிமுகவை அவ்வளவு எளிதாக பாஜக மேலிடம் விடமாட்டார்கள் என்றும் கூட்டணியை தொடர வைப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் தீவிரம் காட்டுகிறார்கள் எனவும் புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார். அதிமுக பாஜக கூட்டணி தொடர வேண்டும் என விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் இந்த முயற்சி எவ்வளவு தூரம் பலன் அளிக்கும் என்பது பற்றி தாம் சொல்ல முடியாது என்றும் ஆனால் அதிமுகவுடனான கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் மட்டும் பாஜக மேலிடம் சீரியஸாக இருக்கிறது என்பது தான் தனக்கு கிடைத்த தகவல் எனவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் புலிவாலை பிடித்த கதையாக அதிமுக நிலை இருப்பது தெரியவருகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதை பாஜக மேலிடம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறிய கிருஷ்ணசாமி சந்திராயனை வெற்றிக்கரமாக செலுத்த எப்படியெல்லாம் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோ அதேபோல் அதிமுக கூட்டணிக்கும் முயற்சிகள் எடுப்பார்கள் என நினைக்கிறேன் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவும் பாஜகவும் ஏன் கூட்டணியை தொடர வேண்டும் என விரும்புகிறேன் என்றால், இன்றைக்கு உள்ள தமிழக அரசியல் சூழலில் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்பதால் தான் தாம் இவ்வளவு முயற்சிகள் எடுப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்ற விருப்பத்தையும்,அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் இதுவரை கிருஷ்ணசாமி மட்டுமே பிரஸ்மீட்கள் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தர், ஜான் பாண்டியன், உள்ளிட்டோர் அதிமுக பாஜக கூட்டணி விவகாரத்தில் இது வரை எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் கிருஷ்ணசாமியை பொறுத்தவரை தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. அங்கே தேர்தல் பணிகளை கூட அவர் ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications